முக்கிய செய்திகள்:
100 நாள் வேலைத்திட்டத்தால் தமிழக பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர் : ராகுல் பேச்சு

ராமநாதபுரத்தில் இன்று நடந்த காங்கிரஸ் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:

"தமிழக மீனவர்கள் நலனில் காங்கிரஸ் அக்கறை கொண்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக, வறுமை கோட்டுக்குக் கீழே இருந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது காங்கிரஸ் அரசு. இது, மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. மொத்தம் 15 கோடி மக்களை வறுமை நிலையில் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பெண்கள் எழுச்சி கண்டுள்ளனர். 100 நாள் வேலைத் திட்டம் அதற்கு வழி செய்தது. குறிப்பாக, தமிழக பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

உணவுப் பாதுகாப்பு திட்டத்தால் அடைந்த நன்மைகள் அதிகம். எதிர்கட்சிகள் இதனை எதிர்த்தன. ஆனால் இப்போது அதனை அவர்கள் தேர்தல் அறிக்கையில் இணைத்துள்ளார்கள்.

காங்கிரஸ் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அரசியல் தகவல்களை தர நினைத்தது. ஏதேனும் ஒரு வளர்ச்சி குறித்து மக்கள் அறிய வேண்டும் என்றால், அந்தத் தகவலை அறியும் உரிமையை அளித்தது. மக்கள் அனைத்து தகவல்களையும் பெற உரிமை பெற்றுள்ளனர். நாங்கள் உங்களுக்கு கேள்வி எழுப்பும் உரிமையை தந்துள்ளோம். சாதாரண மனிதர்களும் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

நாட்டில் ஊழலை ஒழிக்க, காங்கிரஸ் அரசு கொண்டுவந்த லோக்பால் சட்டம் வழிவகுக்கிறது. ஆனால், இந்தச் சட்டத்தை நிறைவேற்றவிடாமல் முடக்க எதிர்கட்சிகள் அனைத்து விதத்திலும் முட்டுக்கட்டையாக இருந்தனர். லோக்பால் போல் வலுவான சட்டங்களைக் கொண்டுவர திட்டமிட்டோம். ஆனால், அவற்றுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக இருந்ததை அறிவீர்கள். ஊழலை ஒழிப்பதில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினால், அது எப்படி சாத்தியம் என்பதையும் அவர்கள் கூற வேண்டும். அது தொடர்பாக எந்த அம்சமும் அவர்களின் (பாஜக) தேர்தல் அறிக்கையில் இல்லை.

விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க எல்லா முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. வேளாண் துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விவசாயக் கடன்கள் மூலம் பலர் பலனடைந்தனர். விவசாயிகளில்ன் அனுமதி இல்லாமல் யாராலும் அவர்களது நிலத்தை பறிக்க முடியாது. நிலம்தான் மனிதனின் ஆதாரம். விவசாயிகளுக்கு நாங்கள் சந்தை விலையை விட அவர்களுக்கு நான்கு மடங்கு பலன் கிடைக்க வேண்டும். முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைவிட, காங்கிரஸ் அரசுதான் விவசாயிகளுக்கு வெகுவாக துணைபுரிந்திருக்கிறது.

பெண்களின் முன்னேற்றத்தை எடுத்துக்கொண்டாலும், காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் அவர்களுக்கு உரிய அதிகாரத்தை அளித்து வருகிறது. தமிழகப் பெண்கள் மிகுதியாக முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்கு கூட பெண்களின் கூட்டமே அதிகமாக உள்ளது. பெண்களுக்கு 50% பஞ்சாயத்து தேர்தலில் இடம் தந்துள்ளோம்.

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு அளிக்கவே காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், அதனை பாஜக நிறைவேற்றவிடவில்லை. 2014-ல் பதவி ஏற்றவுடன் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும். அனைத்து காவல் நிலையத்திலும் 25% இடஒதுக்கீடு வழங்கப்படும். தமிழகத்தில் சுய உதவி குழு வலுவாக உள்ளது. அதன்மூலம் பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். கடன்களை பெற்று லட்சக்கணக்கான பெண்கள் சுய தொழிலை தொடங்கி உள்ளனர். கடந்த 10 வருடத்தில் பெண்களின் தரமே உயர்ந்துள்ளது.

வேலைவாய்ப்பு, தமிழகத்தில் இது மிக பெரிய சவாலாக உள்ளது. நீங்கள் பயன்படுத்தும் பொருடகள் அனைத்தும் சீன தயாரிப்பாகவே இருக்கிறது. இதில் ஏன் நமது பங்கு இல்லை. நாம் உபயோகிக்கும் பொருட்கள் நமது உற்பத்தியாக இருக்க வேண்டும். நமது பொருட்கள் அயல் நாடுகளுக்கு செல்ல வேண்டும். அது, தமிழர்களால் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

தொழிற்சாலைகளை உருவாக்குவோம். இதற்கான மின்சாரம் வழங்கப்படும். பல பாலங்களை கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் வர உள்ளன. பல லட்சம் தமிழர்கள் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவர்.

தற்போது வசதி பெற்றவர்களால்தான் அனைத்து மருத்துவ செலவுகளையும் சந்திக்க முடிகிறது. ஆனால் விவசாயியோ, தொழிலாளியோ நோயுற்றால் அவர்களால் செலவைச் சந்திக்க முடியவில்லை. குழந்தைகள் உடல் நலக் குறைவால பாதிக்கப்பட்டால் பெண்கள்தான் முதலில் அவதிப்படுகின்றனர். கொடிய வியாதிகள் வந்தால் கடன் வாங்குகின்றனர். நாங்கள் அனைத்து ஏழை மக்களுக்கும் இலவச மருத்துவம் கிடைக்க வழிவகுப்போம். அனைவருக்கு மருத்துவம் என்ற உரிமையை நிலைநாட்டுவோம்.

நாங்கள் உணவு பாதுகாப்பு மசோதா வழங்கியதுபோல் சுகாதாரத்துக்கும் முன்னுரிமை வாங்குகிறோம்.

பல லட்சக்கணக்கான மக்களுக்கு சவுகரியமான வீடு இல்லை. நாங்கள் அனைத்து ஏழை மக்களுக்கு சொந்த வீட்டில் வாழ உரிமையை வழங்க விரும்புகிறோம். அனைவருக்கு விடு திட்டம் 2014-ல் வழங்க நினைக்கிறோம்.

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும். நாங்கள் தமிழகத்துக்கு மக்கள் விரும்பக் கூடிய நல்லாட்சியை வழங்க நினைக்கிறோம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாடு மாநிலக் கட்சிகள், மத்தியில் பதவி வகிக்கபோவதில்லை. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். காங்கிரஸ் இங்கு புதிய எழுச்சி பெறும் என்று நம்புகிறேன்.

எங்களுக்கு இஸ்லாமியர்களை பழிக்கும் ஒரு அரசு தேவை இல்லை. ஒரு மாநிலத்தில் இருந்துகொண்டு, மற்றொரு மாநிலத்தைப் பழி வாங்கும் அரசும் வேண்டாம்.

குஜராத் மாடல் குறித்து மோடி பேசுகிறார். இனி, அவர் தமிழகத்தைப் பார்த்து தமிழ்நாடு மாடல் பின்பற்றுவது குறித்து பேசக் கூடிய நாள் விரைவில் வரும்.

உங்களுக்கு நான் அளிக்கும் அனைத்து வாக்குறுதிகளை காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறைவேற்றுவார்கள். தமிழர்களின் குரல் நாடாளுமன்றத்தில் பலமாக ஒலிக்க வேண்டும். காமராஜர் புகழோடு தமிழர்கள் மீண்டும் எழுச்சி பெற வேண்டும். பெரிய உற்சாகத்தோடு நாம் முன்னேறுவோம்" என்றார் ராகுல் காந்தி.

மேலும் செய்திகள்