முக்கிய செய்திகள்:
சோனியா மீது ஜெயலலிதா தாக்கு

வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வெங்கடேஷ் பாபுவை ஆதரித்து, திருவொற்றியூரில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா பேசியது:

"அண்மையில் கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, தமிழக மீனவர் பிரச்சனையில் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அக்கறை காட்டவில்லை என்றும், இந்தியா - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தைக்கு காங்கிரஸ் அரசு தான் காரணம் என்றும் பேசியுள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. மாறாக மீனவர்களை வஞ்சித்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.

மீனவர்களின் நண்பனாக விளங்குகின்ற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை மீனவப் பெருமக்கள் நன்கு அறிவார்கள். எனவே, தமிழக மீனவர்கள் பிரச்சனையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அக்கறை செலுத்தவில்லை என்று சொல்வதை மீனவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1,000 ரூபாய் உதவித் தொகை 2,000 ரூபாயாக உயர்த்திக் கொடுக்கப்பட்டது, மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் 4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை உருவாக்கியது உள்ளிட்ட தமிழக மீனவர்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்த அரசு, எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முக்கிய காரணம் கச்சத் தீவு இலங்கை அரசாங்கத்திற்கு தாரை வார்க்கப்பட்டது தான். 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டைய ஒப்பந்தங்களின் மூலம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான் இலங்கை நாட்டிற்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

கச்சத் தீவை தாரைவார்த்த ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என அறிவிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் 2008-ஆம் ஆண்டு நான் வழக்கு தொடர்ந்தேன். இதற்கு மத்திய காங்கிரஸ் அரசு என்ன பதில் மனு தாக்கல் செய்தது?

கச்சத் தீவு இந்திய நாட்டின் ஒரு பகுதியே அல்ல என்று கூறி; ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு மத்திய காங்கிரஸ் அரசு மனு தாக்கல் செய்தது. இது தான் மீனவர்கள் மீது மத்திய காங்கிரஸ் அரசு கொண்டுள்ள அக்கறையா? இது மீனவர் விரோதச் செயல் இல்லையா?

இது சோனியா காந்திக்கு தெரியாதா? ஒன்றுமே தெரியாதது போல் சோனியா காந்தி பேசுகிறாரா? இப்படிப்பட்ட சோனியா காந்தி தமிழக மீனவர்கள் பிரச்சனையில் எனது தலைமையிலான அரசு அக்கறை செலுத்தவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது ஆகும்; கேலிக்கூத்தானது ஆகும்.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அன்றாடம் பாரதப் பிரதமருக்கு நான் கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். இதன் மீது மத்திய காங்கிரஸ் அரசால் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஏன் மத்திய காங்கிரஸ் அரசு வெளியிடவில்லை? இதனை அனுப்புமாறு நாங்கள் கேட்டும், அனுப்பாமல் மத்திய காங்கிரஸ் அரசு ஏன் மவுனம் சாதிக்கிறது என்பதை சோனியா காந்தி விளக்க வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு, சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதனை நிறைவேற்றிக் காட்டிய அரசு, எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. ஆனால், இந்தப் பேச்சு வார்த்தைக்கு காரணமே காங்கிரஸ் அரசு தான் என்று சோனியா காந்தி பேசி இருக்கிறார்! இது என்ன பித்தலாட்டம்?

தமிழக மீனவர்களை அடித்து துன்புறுத்துவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் இலங்கை நாட்டு ராணுவத்தினருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று நான் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதினேனே? ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? நான் 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், பாரதப் பிரதமரை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் சூரை மீன்பிடி விசை படகுகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதன் மீது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? இருப்பினும் எனது தலைமையிலான அரசு சூரை மீன் பிடி விசைப் படகுகள் வாங்க 50 விழுக்காடு மானியம் வழங்கி வருகிறது.

முடசலோடையில் உள்ள மீன் இறங்கு தளத்தை 7 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விரிவுபடுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதே போன்று, சாமியார் பேட்டையில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகாரில் 78 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் அமைக்க என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழக மீனவர்களுக்கு எதிராக, இலங்கை அரசுக்கு சாதகமாக செய்வதை எல்லாம் செய்து விட்டு, தேர்தல் வந்தவுடன் மீனவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் சோனியா காந்தி.

இத்துடன் நின்றுவிடவில்லை. மீனவர்களின் உற்ற நண்பனாக விளங்கிக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது புழுதிவாரி இறைக்கிறார். தமிழக மீனவர்கள் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி போல் துரோகம் செய்த கட்சி வேறு எதுவுமே கிடையாது. மீனவர்களைப் பற்றி பேசுவதற்கு உரிய அருகதையே காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.

ஓட்டுக்காக தேர்தல் சமயத்தில் தமிழக மீனவர்கள் மீது கரிசனத்தை பொழியும் சோனியா காந்தி அவர்கள், இதற்கு முன்பு இந்தப் பிரச்சனை பற்றி எங்காவது பேசியிருக்கிறாரா? நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தையாவது பேசி இருக்கிறாரா?

காங்கிரஸ் மற்றும் அதற்கு பக்க பலமாக இருந்த தி.மு.க. ஆகியவற்றின் மீனவ விரோத செயலுக்கு, இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும், திமுக-வுக்கும் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் ஜெயலலிதா.

மேலும் செய்திகள்