முக்கிய செய்திகள்:
சேலத்தில் திமுகவினர் மீது அதிமுகவினர் கற்களை வீசி தாக்குதல் : 7 பேர் கைது

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள சித்தூர் கூலையனூரில் சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் உமாராணியை ஆதரித்து திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இடைப்பாடி ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் நாகராஜன், ஒன்றிய அவைத் தலைவர் மாது, துணைச் செயலாளர் ஜெயவேலு மற்றும் நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிமுகவைச் சேர்ந்த சித்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தியின் கணவர் காந்தி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினரை தடுத்து நிறுத்தினார். இதில் இவ்விரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து நாகராஜன் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தபுகாரின் அடிப்படையில் காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை மீண்டும் சித்தூர் ஊராட்சி மன்ற பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் இருசக்கர வாகனங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஏற்கனவே பிரச்சாரத்தின்போது தகராறு ஏற்பட்டதால் பூலாம்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திமுகவினர் வீடு, வீடாக வாக்கு சேகரித்தபோது சித்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி, அவரது கணவர் காந்தி உள்பட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வழிமறித்து வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த அதிமுகவினர், திமுகவினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதைப்பார்த்த ஊர்மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் திமுகவைச் சேர்ந்த நாகராஜன், செந்தில்குமார், சக்திவேல், குமார் உள்ளிட்ட ஏழு பேர் பலத்த காயம் அடைந்தனர். பூலாம்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம், எஸ்.எஸ்.ஐ.க்கள் நடராஜன், செல்லவீரன் ஆகியோர் இருகட்சியைச் சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர். இதில் இவர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த திமுகவினர் உடனடியாக இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த தாசில்தார் ஜெயராமன் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். காயம் அடைந்த திமுகவினர் பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதுபோல அதிமுகவினரும் காயம் அடைந்ததாக போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தியின் கணவர் காந்தி, குழந்தையம்மாள், கிருஷ்ணவேணி, லட்சுமி, ஈஸ்வரி, பாவாளி, பாக்கியம் ஆகிய ஏழு பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்