முக்கிய செய்திகள்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திமுக கூட்டணிக்கு ஆதரவு

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அவசர மாநில செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அமைப்பின் மாநில தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம், பசுவதை சட்டம், பொது சிவில் சட்டம், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவோம் என்கிற பாஜகவின் தேர்தல் அறிக்கையின் அம்சங்களை ஜெயலலிதா விமர்சிக்கவோ எதிர்க்கவோ இல்லை. எனவே அதிமுகவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவது என முடிவு செய்தோம்.

இனி யாருக்கு ஆதரவு என்பது குறித்து அவசர செயற்குழுவைக் கூட்டி விவாதித்து முடிவு செய்தோம். அதன்படி புதுச்சேரியில் யாருக்கும் ஆதரவில்லை. ஆனால், பாமக, என்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தவிர வேறு வேட்பாளர் யாருக்கு வேண்டுமானாலும் முஸ்லிம்கள் வாக்களிக்கலாம் என முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தேனி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதால் அவர்களை ஆதரிப்பதெனவும் மற்ற தொகுதிகளில் திமுக அணியை ஆதரிப்பதெனவும் முடிவு செய்துள்ளோம்.

திமுகவுக்கு நாங்கள் எச்சரிக்கையுடன் கூடிய ஆதரவையே வழங்கியுள்ளோம். தேர்தலுக்குப் பிறகு அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், அடுத்த தினத்திலிருந்து திமுகவை அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடையச் செய்வதற்கான பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குவோம்.

மோடியை பிரதமராக்க ஆதரவு வழங்க மாட்டோம் என அறிவிப்பு செய்யாதவரை ஜெயலலிதாவுக்கு ஆதரவு தர வாய்ப்பில்லை. இனிமேல் அப்படி அவர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அதற்கான காலம் கடந்துவிட்டது என்றார்.

மேலும் செய்திகள்