முக்கிய செய்திகள்:
ஆழ்குழாய்களை மூடி பராமரிக்க அனைவரும் முன்வரவேண்டும் : வைகோ அறிக்கை

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணேசன்-தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் ஹர்சன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நிலை என்னவாகுமோ? என்று மிகவும் மனவேதனை கொண்டிருந்தேன்.

இதுபோன்ற சம்பவங்களில் மீட்புப் பணிக்கு உதவுவதற்காக நாலாட்டின் புத்தூர் மணிகண்டன் தாமே உருவாக்கி சீரமைத்த ரோபோ மற்றும் கேமரா கருவிகளின் துணையோடு சமூக அக்கறை கொண்ட தமது நண்பர்கள் திருநாவுக்கரசு, ராஜ்குமார், வல்லரசு ஆகிய தோழர்களின் திட்டமிட்ட செயல்பாட்டால், குத்தாலாப்பேரி சிறுவன் ஹர்சன் மீட்கப்பட்ட செய்தி அறிந்து மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

இப்பணியில் ஈடுபட்டு சிறுவனை மீட்ட நாலாட்டின் புத்தூர் மணிகண்டன் குழு வினருக்கும், மீட்புப் பணிக்கு உதவிய மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறையினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உளமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏதும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளின் உயிர் பறிக்கும் எமனாக விளங்கும் திறந்த நிலை ஆழ்குழாய்களை மூடி பராமரிக்க, ஆழ்குழாய் அமைப்போரும், சமூக அக்கறை உள்ள அனைவரும் முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்