முக்கிய செய்திகள்:
சேலத்தில் நடிகை குஷ்பு தீவிர வாக்கு சேகரிப்பு

சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் உமாராணி செல்வராஜூக்கு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நான் தி.மு.க. உறுப்பினராக வந்து உங்களை சந்திக்கிறேன். தமிழக மக்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷப்படுகிறேன். நான் உங்கள் வீட்டு மகளாக, உங்கள் வீட்டு மருமகளாக வந்து வாக்கு கேட்கிறேன். எனக்காக ஓட்டு கேட்கவில்லை. தமிழக நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக ஓட்டு கேட்கிறேன்.

உமாராணிக்கு நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்தால் அவர் சேலம் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவார். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்வார். தலைவர் கலைஞரும், ஸ்டாலினும் கொடுத்த வாக்குறுதிகளை செய்து தருவார்கள். ஜெயலலிதாவிற்கு வாக்களித்தீர்கள். ஆனால் அவர் இந்த மூன்று வருடத்தில் என்ன செய்தார். ஒன்றும் செய்யவில்லை. நமக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.

மின்தட்டுப்பாட்டை சரி செய்கிறேன் என கூறி ஓட்டு வாங்கினார். ஆனால் இப்போது 16 மணி நேரம் மின்வெட்டு, 18 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழகம் இருட்டில் மூழ்கி உள்ளது. விலைவாசி உயர்ந்து விட்டது.

தமிழகத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டிற்கு திட்டமிட்ட சதி என்று ஜெயலலிதா தற்போது கூறி வருகிறார். நான் கேட்கிறேன்? தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10 ஆயிரம் பொறியாளர்கள், 70 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் எப்படி மின்நிறுத்தம் செய்யப்படும்? இது தமிழக மக்களின் காதில் பூ சுத்துகின்ற வேலையாகும்.

தி.மு.க. ஆட்சியில் குழந்தைகளுக்கு ஒரு டம்ளர் சத்தான பாலை கொடுத்தீர்கள். ஆனால் இப்போது கால் டம்ளர் பாலில், முக்கால் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாலை தரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து உமாராணியை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். தி.மு.க,. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் தமிழகம் மேலும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்