முக்கிய செய்திகள்:
சிறுபான்மையினர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் நரேந்திர மோடி : வைகோ

ம.தி.மு.க. வேட்பாளராக தேனி பாராளுமன்ற தொகுதியில் க.அழகுசுந்தரம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேனி மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தல் பிரசாரம் செய்தார்.

தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் வைகோ தனது பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தின்போது வைகோ பேசியதாவது:-

நான் நொந்து போய் இருப்பதாக அமைச்சர் தாமோதரன் பெயரில் ஜெயலலிதா அறிக்கை விடுக்கிறார். நான் வாய் திறந்து பேசினால் அவர்கள் தாங்க மாட்டார்கள்.

தேர்தல் நெருங்கி வருவதால் 10-ந்தேதி முதல் தேர்தல் வரை அனைத்து மதுபானக்கடைகளையும் மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்.

நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று காங்கிரஸ் கட்சியினர் அபாண்டமான குற்றம் சாட்டி வருகின்றனர். அது முற்றிலும் பொய்யான பிரசாரம். குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் நரேந்திர மோடி.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் முடிவு முக்கியம் அல்ல. நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி. ஆனாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் தான் நமக்கு மரியாதை கிடைக்கும். இவ்வாறு வைகோ பேசினார்.

மேலும் செய்திகள்