முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்

தமிழகத்தில் வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று (புதன்கிழமை) வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் ஏப்ரல் 24-ந் தேதி பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 29-ந் தேதி தொடங்கியது. விடுமுறை நாட்கள் தவிர மற்ற ஆறு நாட்களிலும், தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றின் வேட்புமனு பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனைக்கு பிறகான பட்டியலை நேற்று இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் ஆயிரத்து 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் ஆண்கள் ஆயிரத்து 134 பேர், பெண்கள் 121 பேர், அரவாணி ஒருவர்.

இவற்றில் 348 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 906 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் 842 ஆண்கள், 63 பெண்கள், ஒருவர் அரவாணி.

ஆலந்தூர் இடைத்தேர்தலுக்காக 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 16 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவற்றில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 14 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இவர்களில் 12 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள்.

இன்று வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும். காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.

அதைத் தொடர்ந்து வேட்பாளரின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். இன்றே பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களையும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஒதுக்குவார்கள்.

வேட்பாளர் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டதும், தபால் ஓட்டுக்கான ஓட்டுச் சீட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய சீட்டுகளை அச்சடிக்கும் பணி தொடங்கும்.

வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய சீட்டுகள் அச்சடிக்கப்பட்டதும் அவை ஓட்டு எந்திரங்களில் ஒட்டப்பட்டு, தேர்தலுக்காக தயார்படுத்தப்படும். 24-ந் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

மேலும் செய்திகள்