முக்கிய செய்திகள்:
ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் மின்சாரமே இல்லை : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

தி.மு.க. ஆட்சியில் 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. ஆனால் தற்போது ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் மின்சாரமே இல்லை. இந்த பகுதியில் காற்றாலை மின்சாரம் அதிகம் உற்பத்தியாகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.3.15–க்கு அரசுக்கு காற்றாலை அதிபர்கள் கொடுக்க சம்மதித்தனர்.

ஆனால் அவர்களிடம் மின்சாரம் வாங்காமல் வெளிமாநிலத்தில் இருந்து ஒரு யூனிட் 6 ரூபாய் 50காசுக்கு வாங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்கிறது. அதிகப்படியான கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவா? இந்த நடவடிக்கை எடுக்கிறார்கள். இதனால் காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாத்திரபட்டறைகள் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் கூலி உயர்வு கேட்டு சில்வர் மற்றும் பித்தளை பாத்திர தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தேர்தலை காரணம் காட்டி பொய்யான வாக்குறுதி அளித்து வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியின் போது சேதுசமுத்திரதிட்டம் செயல்படுத்தப்பட்டு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல திருப்பூரில் தி.மு.க. ஆட்சியில் ரூ.67 கோடி மதிப்பில் பறக்கும் பாலம் திட்டம், 4 ரெயில்வே மேம்பால திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் திருப்பூருக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத் தப்பட்டது என்பதை திருப்பூர் மக்கள் மறக்கமாட்டார்கள்.400 வருட பாரம்பரியமிக்க பாபர் மசூதியை இடித்தபோது எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இருந்து முதன்முதலாக குரல் கொடுத்தவர் கருணாநிதிதான். அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அப்போதைய தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கரசேவையை ஆதரித்து பேசினார்.

ஆனால் தற்போது அப்படி நான் எதுவும் பேசவில்லை என்று கூறுகிறார். நான் இதை ஆதாரத்துடன் எடுத்துச்சொல்வேன். ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் அரசு, கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வை விமர்சித்து வருகிறார். ஆனால் இதுவரை பாரதீய ஜனதாவை பற்றியும், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமாடிையும் அவர் விமர்சிப்பது இல்லை.

நான் செல்கிற பிரசார கூட்டங்களில் இதுபற்றி பேசி வருகிறேன். இதுவரை ஜெயலலிதா அதற்கு பதில் சொல்லவில்லை. இதைப்பார்த்தால் ஜெயலலிதாவுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையே மறைமுக உறவு இருக்கிறது என்பது தெரிகிறது. ஜெயலலிதா தொடர்ந்து மவுனமாகவே இருக்கிறார். மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி. மேற்கண்டவாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் செய்திகள்