முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் கட்சி போல் தமிழர்களுக்கு வேறு எந்த கட்சியாலும் துரோகம் செய்ய முடியாது : பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து, வருகிற ஏப்ரல் 1–-ந் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். காங்கிரஸ் ஆட்சியை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு துணை போய், இன்று கபட நாடகம் ஆடும் தி.மு.க.வை இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம்.

காங்கிரஸ் கட்சி போல் தமிழர்களுக்கு வேறு எந்த கட்சியாலும் துரோகம் செய்ய முடியாது. ஈழத்தமிழர்களுக்கு ஏற்படும் இனப்படுகொலையை பல்வேறு நாடுகள் கண்டித்து வரும் நேரத்திலும், ஜெனிவா ஒப்பந்தத்தில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்ததற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். அவர்களை நாட்டைவிட்டு மக்கள் வெளியேற்றும் காலம் விரைவில் வரும். ஆனால் அவர்கள், ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கும் நல்ல செயல்களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என கருதி வெளிநடப்பு செய்ததாக காரணம் கூறி வருவது கபட நாடகம் ஆகும்.

2009–-ம் ஆண்டு போர் முடிந்த பிறகும் தமிழர்களை பழிவாங்கும் நடவடிக்கை தொடர்கிறது. தமிழர் பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட சிங்கள ராணுவம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். ஜெயிலுக்கு கொண்டு செல்லும் அவர்கள் நிலை என்ன? என்பது இதுவரை தெரியவில்லை.

ஏராளமான தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்ந்து நடக்கிறது.

இதைத்தான் சிங்கள அரசு நல்லது செய்து வருவதாக காங்கிரஸ் அரசு கூறி நற்சான்று வழங்கி வருகிறது. இந்த துரோகத்தை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுகிளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களையும், அவர்களுக்கு துணைபோன தி.மு.க. வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்வார்கள். ஆனால் தற்போது தி.மு.க. தன் தவறை மறைக்க காங்கிரஸ் கட்சி மீது முழு பழியை போட்டு தாங்கள் நல்லவர்கள் போல் நடித்து ஓட்டுகேட்டு வருகிறார்கள்.

எனவே காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆகிய 2 கட்சியினருக்கும் தமிழர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு தமிழர்கள் பேரியக்க தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.

மேலும் செய்திகள்