முக்கிய செய்திகள்:
தி.க.சி. மறைவுக்கு வைகோ இரங்கல்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–

ரசிகமணி டி.கே.சி.யை தந்த நெல்லை மாவட்டம், இலக்கியச் சுடரொளி திருநெல்வேலி கணபதியப்பன் -சிவசங்கரன் என்கிற தி.க.சி.யையும் தந்தது. இவர் 1925 மார்ச் 30–ல் பிறந்தார். 90–வது வயதின் வாசலில் மறைந்தார்.

பாரதி, பாரதிதாசன், ஜீவா, வா.ரா. ஆகியோரால் செதுக்கப்பட்டவர். புதுமைப் பித்தன், கோ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன் ஆகிய எழுத்தாளர்கள் தி.க.சி.யின் உற்ற நண்பர்கள்.

பல இலக்கிய விமர்சன நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் வழங்கிய படைப்பாளி. பொதுஉடைமைக் கொள்கையை ஏற்றபோதிலும் காரல் மார்க்ஸ், லெனின் சிந்தனை வழியில் தமிழ் ஈழ விடுதலைக்கு தன் எழுத்தையும், பேச்சையும் அர்ப்பணித்தவராகவே வாழ்ந்தார்.

எனக்கு அறிவுரையும் ஆறுதலும் வழங்கி வந்த ஒரு மூத்த அறிஞரை இழந்து விட்டேன். இலக்கிய வானில் பிரகாசித்த ஒளிச்சுடர் அணைந்து விட்டது.

ஆனால், அவர் படைத்த நூல்களும், அவரது புகழும் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும். அவரது மறைவால் துயரத்தில் தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்