முக்கிய செய்திகள்:
பறக்கும் படையினர், உரிய விசாரணை நடத்தாமல் உடனடியாக பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது : பிரவீன்குமார்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.இது அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சியினருக்கு மட்டும்தான் பொருந்தும்.

நேர்மையான முறையில் வியாபாரம் செய்யும் ஒருவர் பணத்தை எடுத்துச் செல்லும்போது, அந்த வியாபாரியின் பின்னணி, அவர் எடுத்துச் செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் ஆராயப்பட வேண்டும். அதன்பிறகு தகுந்த ஆவணங்கள் இல்லா விட்டால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

வாகன சோதனையின் போது அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை கொடுத்தால் சம்பந்தப்பட்ட வியாபாரியை சோதனையிடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும். துன்புறுத்தக் கூடாது.

வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையினர், உரிய விசாரணை நடத்தாமல் உடனடியாக பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது. பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வது தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட உரிய விதிமுறையின் கீழ் மட்டுமே நடைபெற வேண்டும்.

வாகன சோதனையின் போது 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்தால் உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையையும், பெயர் எழுதப்பட்டுள்ள பேட்ஜையும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

இதனை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாகன சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறியலாம்.

வாகன சோதனையில் ஈடுபடுவோர் கடுமையான முறையிலோ அல்லது தேவையில்லாத வகையிலோ நடந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் பிரவீன்குமார் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்