முக்கிய செய்திகள்:
பா. சிதம்பரத்திற்கு ஈ.வி.கே.எஸ். பாராட்டு

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து நிற்கும் காங்கிரஸ் கட்சி 33 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தற்போது எம்.பி.க்களாக இருப்பவர்களுக்கும், புது முகங்களுக்கும் ‘சீட்’ கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திருப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் மாலைமலர் நிருபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் நிலவரம் குறித்து கேட்டபோது, அவர் அளித்த விளக்கம் வருமாறு:–

கேள்வி:– காங்கிரசின் தேர்தல் பிரசாரம் எப்படி இருக்கிறது?

பதில்:– காங்கிரஸ் தனித்து நிற்பதால் தொண்டர்கள் சோர்வடையவில்லை. உற்சாகமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை ஒதுங்கி இருந்தவர்கள் கூட இப்போது தேர்தல் பணி களத்தில் இருக்கிறார்கள்.

கே:– திருப்பூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பற்றி?

ப:– திருப்பூர் தொகுதியை பொறுத்தவரை தேர்தல் களம் உற்சாகமாக இருக்கிறது. மிகப்பெரிய வெற்றி பெறுவேன்.

கே:– பா.ஜனதா தலைமையிலான புதிய கூட்டணி வெற்றி பெறுமா?

ப:– பா.ஜனதா தலைமையில் உருவாகியுள்ள கூட்டணி வலுவில்லாதது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒன்று, இரண்டு கட்சிக்கு செல்வாக்கு இருந்தாலும் கூட தமிழகத்தில் பா.ஜனதா மிக பலவீனமான, மோசமான நிலையில் இருக்கிறது. எனவே அதன் தலைமையில் உள்ள கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.

கே:– மத்திய மந்திரி ப.சிதம்பரம் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் எடுத்த முடிவு எப்படி?

ப:– காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கருத்தை ப.சிதம்பரம் ஒருவருடமாக சொல்லி வருகிறார். அதன் அடிப்படையில் அவர் தனது மகனுக்கு வழிவிட்டு விலகி இருக்கிறார்.

இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்ற சிதம்பரத்தின் முடிவை நான் பாராட்டுகிறேன். இதேபோல் கிருஷ்ணசாமி மகனுக்கும், ரெங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன்குமாரமங்கலத்திற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கே:– பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்தும் என்றும், பிரதமராக நரேந்திரமோடி வருவார் என்றும் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறதே?

ப:– அது தவறான கருத்து. முதலில் நரேந்திர மோடி வெற்றி பெறுவதே சந்தேகம். அதனால்தான் அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். 2 தொகுதியில் ஏதாவது ஒன்றில் வெற்றி பெறட்டும். பிறகு பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்