முக்கிய செய்திகள்:
தமிழர்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை : வெங்கையாநாயுடு

பா.ஜனதா மூத்த தலைவர் வெங்கையாநாயுடு சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. அவரை பிரதமராக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டுள்ளது. காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மட்டும்தான் காங்கிரஸ் அணியில் உள்ளன. வேறு எந்த கட்சியும் காங்கிரஸ் அணியில் இல்லை.

மக்கள் அந்த கட்சியை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். ஒரு தீண்டத்தகாத கட்சியாக உள்ளது. எனவேதான் தோல்வி பயத்தில் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டனர்.

1967–க்கு பிறகு தமிழகத்தில் பாரதீய ஜனதா, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். தேர்தல் முடிவு எதிர்பாராத திருப்பமாக அமையும். ஆச்சரியமான முடிவுகளை தரும்.

மோடி அலை தமிழகத்தில் எந்த பகுதியையும் விட்டு வைக்கவில்லை. இதனால்தான் தி.மு.க. தலைவர் கருணாநிதியே பாராட்டினார். அவரது மகன் அழகிரியும் மோடியை பாராட்டி இருக்கிறார்.

இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி 300–க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 132 தொகுதிகள் உள்ளன. இதில் 50 சதவீதத்துக்கும் மேல் வெற்றியை தேடித்தர வேண்டும் என்று இந்த மாநில மக்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

எல்லா கட்சிகளும் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிலையான திறமையான ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். மிகப்பெரிய கட்சியான பாரதீய ஜனதாவில் ஒரு சில தொகுகளில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை வைத்து கட்சிக்குள் பெரிய பிரச்சினை போல் பெரிதுபடுத்துகிறார்கள். அது அவர்களுக்கு எந்த பலனையும் தராது.

அத்வானி மூத்த தலைவர், அவரது ஆலோசனையை கட்சி பெற்று வருகிறது. ஜஸ்வந்த்சிங்குக்கு உரிய மரியாதையை கட்சி வழங்கி வருகிறது. பதவிகளையும் வழங்கி இருக்கிறது. தேர்தலில் அவருக்கு சீட் ஒதுக்காதது மாநில தலைமை எடுத்த முடிவுதான்.

கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சியின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதுதான் நாகரீகமானது. 5 முதல் 10 சதவீதம்தான் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதி 90 சதவீதம் பேர் கட்சிக்காக உழைத்தவர்கள்.

இலங்கை பிரச்சினை அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினை. தமிழர்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் ராஜீவ்காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தப்படி 13–வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தி தமிழர்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்பதை வலியு-றுத்துவோம். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

மேலும் செய்திகள்