முக்கிய செய்திகள்:
விசைத்தறி உரிமையாளர்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்க்கிறார்கள். இவர்கள் கூலி உயர்வு கோரி கடந்த மாதம் 21–ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 15 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டு கமிட்டி கூட்டம் பல்லடத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* 15 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாத பட்சத்தில் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

* 15 தடவை நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடுக்கு வராத விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டிப்பது.

* நாளை (22–ந்தேதி) பல்லடம், சோமனூர், தெக்கலூர் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

* வருகிற 24–ந் தேதி முதல் 5 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்வது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வேலுசாமி, செயலாளர் அப்புக்குட்டி, பொருளாளர் கந்தசாமி, மங்கலம் தலைவர் வேலுசாமி, சோமனூர் தலைவர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்