முக்கிய செய்திகள்:
விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்களை விடுவிக்காவிடில் பள்ளி அங்கீகாரம் ரத்து

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வு கடந்த 3–ந்தேதி தொடங்கியது. இதற்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணி வருகிற 21–ந் தேதி முதல் நடைபெற உள்ளது.மாநில முழுவதும் 67 மையங்களில் நடைபெறும் இந்த பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதே போல் 10–ம் வகுப்பு அரசு பொது தேர்வு மார்ச் 26–ந் தேதி முதல் ஏப்ரல் 9–ந் தேதி வரை நடக்கிறது.

பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் பாடவாரியாக ஆசிரியர்கள் பங்கு பெறுவர். இந்த ஆசிரியர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் கல்வித்துறையிடம் வழங்க வேண்டும்.அதன்படி விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெறும் போது அதற்கான ஆசிரியர்களை பள்ளியில் மற்ற பணிகளில் இருந்து தலைமை ஆசிரியர் விடுவிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் பலர் புறக்கணித்தனர்.

இதனால் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அவர்களுக்கான எண்ணிக்கையை விட கூடுதலாக விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டு திருத்தி கொடுக்க வலியுறுத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் மதிப்பெண்கள் பாதிக்கப்படும்.தற்போது கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அந்த பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

மேலும் செய்திகள்