முக்கிய செய்திகள்:
துரோகம் செய்தது காங்கிரஸ்; துணைபோனது திமுக : ஜெயலலிதா பேச்சு

மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்தியஅரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. அதற்கு திமுக உறுதுணையாக இருந்தது” என நாகர்கோவில் பொருட்காட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்து அவர் பேசியதாவது:சுதந்திரத்துக்கு முன் வெள்ளையர்கள் நம்மைச் சுரண்டினர். இப்போது ஆட்சி செய்யும் கொள்ளையர்களை வாக்குரிமையின் மூலம் விரட்டியடிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் அரசில் இந்திய பொருளாதாரம் சூறையாடப்பட்டு விட்டது. மத்தியில் நடைபெறும் ஊழல், குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு அமையும்போது தமிழர் வாழ்வு வளம் பெறும்.

தமிழகத்தில் தொழில் வளத்தை அதிகரிக்க 33 இந்திய, பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,672 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் அதன் மூலம் வேலை வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

உலமாக்களின் உதவித் தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. வக்பு வாரியத்துக்கு கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல மானியம் வழங்கப்படுகிறது. 3.4 சதவிகித இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தர வேண்டும் என இஸ்லாமியர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த கோரிக்கை மாநில பிறபடுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ராணுவப் பயிற்சி அளித்தது இதே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான். அதற்கு திமுக உறுதுணையாக இருந்தது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இன்றுவரை மத்திய அரசு குழு அமைக்கவில்லை. விவசாய காப்பீட்டு பிரீமியத் தொகையை உயர்த்தியது, உரம் விலையேற்றம் என பல இடர்பாடுகளுக்கு இடையில் வரும் இந்த தேர்தல், இந்திய வளர்ச்சியை மாற்றி அமைக்கும் தேர்தல்.

இந்தியாவில் அதிக அளவில் நிலக்கரி கிடைக்கிறது. தனியாருக்கு குறைந்த விலையில் நிலக்கரி கொடுத்த வகையில் ஊழல் நடைபெற்றது தணிக்கையில் கண்டறியப்பட்டு, இப்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இரும்பு தாதும் இறக்குமதி செய்கிறோம். உரங்களும் கூட இறக்குமதியே செய்யப்படுகிறது.

மத்திய இடைக்கால நிதி நிலை அறிக்கையின்படி நாட்டின் பாதுகாப்புக்காக செய்யப்படும் செலவு மிக மிகக் குறைவு. புதிய ஆயுதங்கள், தளவாடங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவே இல்லை. அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் அரசு அமையும்போது முப்படையினருக்கு தேவையான வசதிகள், சலுகைகள் நிறைவேற்றப்படும். தமிழகம் தேவையானவற்றை பெற ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்