முக்கிய செய்திகள்:
மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி: தா.பாண்டியன்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது பற்றி முடிவெடுக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், துணைச் செயலாளர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், "நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.

எங்கள் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் மார்ச் 15-ம் தேதி திருச்சியில் நடக்கும். அதில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது. அமைப்பு ரீதியாக பலமுள்ள தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம். பிற இடங்களில் வகுப்புவாத பாஜகவை முறியடிக்கும் வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும்" என்றார் தா.பாண்டியன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் வரும் 14-ம் தேதியும், மாநிலக் குழுக் கூட்டம் 16-ம் தேதியும் சென்னையில் நடக்கவுள்ளன. அந்தக் கூட்டங்களில் தேர்தல் உத்திகள் குறித்த இறுதியான முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், கடந்த பிப்ரவரியில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர். அதிமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்தனர்.எனினும் பல சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் இந்தக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கிடையே, 40 தொகுதிகளுக்கும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மார்ச் 3-ம் தேதி தன்னிச்சையாகப் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார்.

இதையடுத்து, உறவை முறித்துக் கொள்வது தொடர்பாக மார்ச் 4-ம் தேதி அதிமுக தரப்பில் கம்யூனிஸ்ட்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அணியிலிருந்து விலகுவதாக மார்ச் 6-ம் தேதி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்