முக்கிய செய்திகள்:
இலங்கை மீது கருணை காட்டக் கூடாது: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கையில் நடந்த இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கான புதிய வீடியோ ஆதாரத்தை லண்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 6.11 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோ ஆதாரம் காண்பவர் இதயங்களை நொறுக்கும் வகையில் கொடூரமாகவுள்ளது.

புதிய ஆதாரத்தை ஆய்வு செய்த புகழ்பெற்ற தடயவியல் வல்லுனர் டாக்டர் ரிச்சர்ட் ஷெப்பர்ட், இந்த வீடியோ உண்மையானது தான் என்று சான்றளித்துள்ளார்.

இலங்கைப் போர் முடிவடைந்த பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விளக்கும் வகையில் எத்தனையோ வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவது, விடுதலைப்புலிகள் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்குப் பின் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவது, சிறைபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படுவது என சிங்களப்படையினர் போர்க்குற்றங்களை நிரூபிக்கும் வகையிலான ஏராளமான வீடியோ ஆதாரங்கள் கடந்த சில ஆண்டுகளில் வெளியாகியிருக்கின்றன.

இதுவரை வெளியான அனைத்து வீடியோ ஆதாரங்களையும் விட இப்போது வெளியாகியுள்ள ஆதாரம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் சமுதாயத்திற்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என உலகின் பல நாடுகள் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இவற்றுக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல இந்தியா கண்களை மூடிக்கொண்டிருப்பது தான் கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது.

இனப்படுகொலை குற்றவாளியான இலங்கை மீது இந்திய அரசு இனியும் கருணை காட்டினால் அதை வரலாறும் மன்னிக்காது; தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள்.எனவே, ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப் படவுள்ள நிலையில், இலங்கை மீது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்து, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மேலும் செய்திகள்