முக்கிய செய்திகள்:
மார்ச் 25 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் : பிரவீன்குமார்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 25-ம் தேதி வரை மனு செய்யலாம். இதற்காக, தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் மார்ச் 9-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

மக்களவைத் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக நிருபர்களிடம் புதன்கிழமை பிரவீன்குமார் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.37 கோடி. மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 60,417. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பது பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசிக் கப்பட்டு வருகிறது. அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி பெரும்புதூர் (18.55 லட்சம்). குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதி நாகை (11.87 லட்சம்). பதற்றமான வாக்குச்சாவடிகளை கணக்கெடுக்கும் பணி முடியவில்லை.

தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வரும் 25-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேரிலும், ஆன்லைனிலும் மனு செய்யலாம்.

மேலும் மார்ச் 9-ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை அந்தந்த வாக்குச் சாவடிகளிலேயே வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும். பெயர், முகவரி மாற்றம் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். தகுதியுள்ள அனைவருக்கும் வாக்காளர் அட்டை, பூத் ஸ்லிப் ஆகியவை வழங்கப்படும். பொதுமக்கள் ஓட்டுக்காக பணம், பொருள் வாங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பண விநியோகம் போன்ற தவறுகள் நடப்பது தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக தகவல் தரலாம். செல்போனில் படம் எடுத்தோ, எம்எம்எஸ் மூலமாகவோ தேர்தல் துறைக்கு புகார் அனுப்பலாம். அதற்கான வழிவகைகள் அறிவிக்கப்படும். பத்திரிகையாளர்கள் எனது கண், காது போன்றவர்கள். தவறு நடந்தால் எனக்குத் தகவல் கொடுங்கள். நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.

பொதுமக்கள், அதிக ரொக்கப் பணத்துடன் வெளியில் செல்வதாக இருந்தால் உரிய, ஆவணங்கள் இருக்க வேண்டும். இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தால் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும். மது விநியோகத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

 

மேலும் செய்திகள்