முக்கிய செய்திகள்:
திமுக அணியின் பெயர் : கருணாநிதி அறிவிப்பு

திமுக கூட்டணிக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் இன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் கருணாநிதி பேசியது:

"கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விரும்பியவாறு, இந்தக் கூட்டணிக்கு, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.மாவட்ட அளவிலே மாத்திரமல்ல, ஒன்றிய அளவிலே கூட உங்களுடைய கருத்துகள் மதிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை நானே முன் நின்று செய்து கொடுப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கான அறிவுரைகள் மாவட்டச் செயலாளர்கள் மூலமாக வழங்கப்படும்.

பெரியார், அண்ணா வழியில் மாற்றுக் கட்சியினரை மதிக்கக் கற்றுக் கொண்டுள்ள நாங்கள், எந்தச் சூழ்நிலையிலும் உங்களை மதிக்கத் தவற மாட்டோம்.கூட்டணியிலே உள்ளவர்களை ஒரு சில இடங்களில் மதிக்காத சூழ்நிலை இருப்பது இங்கே சுட்டிக் காட்டப்பட்டது. அது நான் உணராத ஒன்றல்ல உணர்ந்திருக்கிறேன், உணர்ந்து திமுக செயல்வீரர்கள் மூலமாக அவர்களுக்கு வலியுறுத்தியிருக்கிறேன். அவர்களைத் திருத்திக் கொள்ளுமாறும் செய்திருக்கிறேன். அது தொடரும்.

இது ஏதோ தேர்தலுக்காக மாத்திரம் தொடரும் என்றல்ல. எதிரியானாலும் அவர்களிடத்திலே அன்போடும், நட்புணர்வோடும் நடக்கக் கற்றவன். அந்தப் பாடத்தை எனக்குக் கற்பித்த பெரியவர்கள் பெரியாரும், அண்ணாவும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மக்களைச் சந்திக்கின்ற காரணத்தால், நாடாளுமன்றத்திலே பெரும்பான்மை பெறுவது யார்? மதச் சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களா அல்லவா என்பதற்கான அந்த வாதத்தை மாத்திரம் எடுத்து வைக்க வேண்டும்.

யாரையும் மட்டம் தட்டாமல், யாருக்கும் மதிப்புக்கு குறைவு ஏற்படாமல், கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து காப்பாற்றி வரும் நயத்தகு நாகரீகம் அணுவளவும் சிந்தாமல் சிதறாமல், நேர்மையாக, நாணயமாக, நலிவுற்ற மக்களுக்காகத் தான் இந்த இயக்கம், இந்தக் கூட்டணி, அவர்களைக் கரையேற்றுவதற்காகத் தான் இந்த அமைப்பு என்பதை இந்த நேரத்தில் மாத்திரமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்காக, இந்திய நாட்டு மக்களுக்காக நம்முடைய உழைப்பும், நம்முடைய செயலும் என்றென்றும் இருந்திட வேண்டுமென்ற உறுதியோடு பாடுபட வேண்டும்.ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றிக்கு இன்று நாம் கொடியேற்றுவோம். அந்தக் கொடி உயரப் பறக்கட்டும், அந்தக் கொடி நிழலில் தமிழ்நாட்டு மக்களை மாத்திரமல்ல. இந்திய நாட்டு மக்களை மதச்சார்பற்ற ஓரணியில் திரட்டுவோம்" என்றார் கருணாநிதி,

இந்தக் கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆர்.,கழகம் ஆர்.எம்.வீரப்பன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், திராவிடர் கழகம் கி.வீரமணி, இந்திய தேசிய லீக் திருப்பூர் அல்தாப், பேராயர் எஸ்ரா சற்குணம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம், உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து மற்றும் பொன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

 

மேலும் செய்திகள்