முக்கிய செய்திகள்:
கேப்டன் சொல் சர்ச்சை: விஜயகாந்த் மீது வழக்கு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேப்டன் என்ற சொல்லைப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது என்றும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை - சைதாப்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கே.தண்டபாணி என்பவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.அதில், 'கேப்டன் என்பது ராணுவத்தில் மிக உயர்ந்த பதவி. சினிமா நடிகரும், எம்.எல்.ஏ.வுமான விஜயகாந்த், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்ததில்லை.

இந்த நிலையில், கேப்டன் என்ற சொல்லை விஜயகாந்த் முறைகேடாகப் பயன்படுத்துகிறார். இது சட்ட விரோதமானது மட்டுமின்றி, இந்திய ராணுவத்தின் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்துவதாகும்.கேப்டன் என்ற சொல்லைப் பயன்படுத்த விஜயகாந்துக்கு உரிமை இல்லை என்பதால், விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சென்னை சாலிகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

எனது புகாரின் அடிப்படையில் விஜயகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் தண்டபாணி கோரியுள்ளார்.இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரின் புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பின், அது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசாரணை தேவைப்பட்டால் ஒரு வார காலத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

மேலும், புகார் மனுக்களை காவல் துறையினர் எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காவல் துறையினர் செயல்பட வேண்டும் என்றும் கூறி, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

 

மேலும் செய்திகள்