முக்கிய செய்திகள்:
சட்டம் படித்த வழக்கறிஞசர்கள் இடைநீக்கம்

தமிழ்நாட்டை சேர்ந்த பலர் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள சட்டக்கல்லூரிகளில் சேர்ந்து, பட்டம் பெற்று, தமிழ்நாடு பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்கின்றனர். அந்த மாநிலங்களில் சட்டப்படிப்புகளில் சேர வயது வரம்பு எதுவும் கிடையாது என்பதால், தமிழகத்தை சேர்ந்த பலர் அங்குள்ள கல்லூரிகளில் பட்டம் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அகில இந்திய பார் கவுன்சில் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு உத்தரவினை பிறப்பித்தது. அதில், 2009-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு 35 வயது பூர்த்தியானவர்கள் சட்டப்படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று இருந்தால், அவர்கள் வக்கீலாக பதிவு செய்ய முடியாது என்று கூறியிருந்தது. இந்த உத்தரவை சில மாநிலங்களில் உள்ள பார் கவுன்சில்கள் ஆதரித்தது. சில மாநிலங்களில் பார் கவுன்சில்கள் எதிர்ப்பு தெரிவித்தது.

அதேநேரம், இந்த வயது வரம்பு உத்தரவை ரத்து செய்ய கோரி அந்தந்த மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சில ஐகோர்ட்டுக்குள், பார் கவுன்சில் உத்தரவுக்கு தடை விதித்தும், சில ஐகோர்ட்டுக்குள் தடை விதிக்க மறுத்தும் உத்தரவிட்டன.

அந்த வகையில், அகில இந்திய பார் கவுன்சிலின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், அகில இந்திய பார் கவுன்சில், இந்த வயது தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்ய ஒரு நபர் கமிஷன் அமைத்தது. இந்த ஒரு நபர் கமிஷன் செய்த பரிந்துரையின் அடிப்படையில், வயது வரம்பு நிர்ணயம் செய்த உத்தரவை வாபஸ் பெற்று அகில இந்திய பார் கவுன்சில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

ஆனால், வயது வரம்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஒரு இடைக்கால உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். அதில், 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 35 வயது பூர்த்தியானவர்கள், சட்டப்படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று, வக்கீலாக பதிவு செய்திருந்தால், அவர்களது வக்கீல் பதிவை சஸ்பெண்டு செய்தும், பின்னர் விசாரணை நடத்தி அவர்களை பார் கவுன்சிலில் இருந்து நீக்கம் செய்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனடிப்படையில், 400 வக்கீல்களின், (வக்கீல்) பதிவை சஸ்பெண்டு செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் கூறியாவது:-

2009-ம் ஆண்டு சட்டப்படிப்பில் சேர்ந்து, பட்டம் பெற்று 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வக்கீலாக பதிவு செய்தவர்களின் வயது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதில், சுமார் 400 பேர், 35 வயதுக்கு பூர்த்தியான பின்னர் (2009-ம் ஆண்டு ஜூன் மாதம்) சட்டப்படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்றவர்கள் என்று தெரியவந்தது.

இதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவின்படி, அவர்களிடம் விளக்கம் பெறாமல் நேரடியாக சஸ்பெண்டு செய்துள்ளோம். இதன்பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களது வக்கீல் பதிவை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்