முக்கிய செய்திகள்:
திமுக வேட்பாளர் நேர்காணல் முடிந்தது

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

கடைசி நாள் வேட்பாளர் நேர்காணல் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலும், பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது.

நேற்று காலை வடசென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. இதில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி, வடசென்னை மகளிர் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஷிம்லா முத்துச்சோழன் ஆகியோர் உள்பட 16 பேர் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை தொகுதிக்கு தயாநிதி மாறன் எம்.பி., உள்பட 16 பேர் பங்கு பெற்றனர். அதைத்தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நேர்காணலில் தென்சென்னை தொகுதிக்கு சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், வசந்தி ஸ்டான்லி எம்.பி., ஆகியோர் உள்பட 26 பேரும், புதுச்சேரி தொகுதிக்கு முன்னாள் புதுச்சேரி முதல்வர் ஜானகிராமன் உள்பட 22 பேரும் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 300 பெண்கள் உள்பட 1500 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். ஆனால் 887 பேர் மட்டுமே நேர்காணலுக்கு வந்திருந்தனர். அதிகபட்சமாக காஞ்சீபுரம் (தனி) தொகுதிக்கு 53 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

நேர்காணலில் கலந்து கொண்ட அனைவரிடத்திலும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘‘உங்கள் தொகுதிகளில் நீங்கள் எவ்வளவு பிரபலமானவர்கள்? உங்கள் செல்வாக்கு என்ன? தேர்தல் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்? உங்களை வேட்பாளராக அறிவித்தால் எவ்வளவு ஓட்டுகள் கிடைக்கும்? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? உள்பட விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்