முக்கிய செய்திகள்:
திமுக கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடமில்லை: கருணாநிதி

திமுக கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இனி இடம் இருப்பதாகத் தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி பதில்

இன்றுடன் நேர்காணல் முடிந்து விட்டது. எப்போது வேட்பாளர்களை அறிவிக்கப்போகிறீர்கள்?

அதற்காக உள்ள குழுவினர் அமர்ந்து ஆலோசித்து, விவாதித்து, எந்தெந்த வேட்பாளர், எந்தெந்த தொகுதிக்கு என்று பிறகு அறிவிப்போம்.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இருக்கிறதா?

இனி புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாகத் தெரியவில்லை.

உங்களுடைய தேர்தல் அறிக்கை இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் என்று சொல்லப்படுகிறதே, எப்படி விஷயங்கள் அதிலே இடம்பெறும்?

இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். படித்துப் பார்த்தால் புரியும்.

கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பதை எப்போது முடிவு செய்வீர்கள்?

இன்னும் இரண்டு நாட்களில்!

அதிமுகவில் புதியவர்களுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் கட்சியிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. அதைப் பார்த்தாலே உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்கும்.

காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முன்னிறுத்திப் பேசியிருக்கிறாரே?

பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கினை அவர் ஒருவேளை மறந்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.

இவ்வாறு அந்தப் பேட்டியில் கருணாநிதி கூறினார்.

மேலும் செய்திகள்