முக்கிய செய்திகள்:
தமிழர்களுக்கு காங். இழைத்த துரோகங்கள்:முதலமைச்சர் ஜெயலலிதா குற்றசாட்டு

இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, நதிநீர்ப் பங்கீடு என காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பட்டியலிட்டார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"2011-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதனை நீங்கள் நிறைவேற்றினீர்கள். என்னை தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக்கினீர்கள்.

அதே போல், தற்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை, உங்களை எல்லாம் நேரில் சந்தித்து விடுப்பதற்காகவே நான் இங்கு வந்து இருக்கிறேன். இதையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1947-ஆம் ஆண்டு மக்கள் மனங்களில் என்ன உணர்வு நிலவியதோ, அதே உணர்வு தான் தற்போது உங்கள் மனங்களில் நிலவுகிறது. 1947-ஆம் ஆண்டு எந்தத் தியாகத்தை செய்தாவது இந்த நாட்டை சூறையாடிய,

நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்த வெள்ளையர்களை, கொள்ளையர்களை, கொடுங்கோலர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் இருந்தார்கள். அதே மன நிலை, இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழித்து தற்போது உங்கள் மனங்களில் உருவாகியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவை வேட்டைக் காடாக்கி, கொள்ளையடித்து, சின்னாபின்னமாக்கி, நாட்டையே சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்; எதிர்காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைய விடக் கூடாது என்ற மன நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல; மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்தத் தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு; ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.

மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ் நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெறும். இதன் அடிப்படையில் நீங்கள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்" என்றார் ஜெயலலிதா.


மத்திய அரசு இழைத்த துரோகங்கள்


இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இது முதல் துரோகம்.

போர்க் குற்றங்கள் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்கவும்; இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இனப் படுகொலை செய்தவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும்; தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் என்னால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இவற்றின் மீது மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? இல்லையே! இலங்கை அரசுக்கு சாதகமாகத் தானே மத்திய காங்கிரஸ் அரசு நடந்து கொண்டது! இது இரண்டாவது துரோகம்.

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. இது மூன்றாவது துரோகம்.

கச்சத் தீவினை மீட்பதற்காக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்த அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது நான்காவது துரோகம். தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்த அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது ஐந்தாவது துரோகம்.

சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் வகையில் மருத்துவப் படிப்பில் பொது நுழைவுத் தேர்வை நுழைக்க நடவடிக்கை எடுக்கும் அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது ஆறாவது துரோகம்.

தமிழகத்திற்குரிய மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்க மறுக்கும் அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது ஏழாவது துரோகம். ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் அதிக சேனல்களை கண்டுகளிக்க வழிவகை செய்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். அனுமதி வழங்க மறுக்கின்ற அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது எட்டாவது துரோகம்.

காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய காங்கிரஸ் அரசு இன்னமும் அமைக்காதது ஒன்பதாவது துரோகம். மாதா மாதம் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி விலைவாசி உயர வழிவகுத்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது பத்தாவது துரோகம்.

இப்படி மத்திய காங்கிரஸ் அரசால் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழக மக்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை. தமிழக அரசுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தின் அதிகாரங்களை பறித்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் உரிமையில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது மத்திய காங்கிரஸ் அரசு. மாநில காவல் துறையின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தை ஏற்படுத்த முனைந்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.

மேலும் செய்திகள்