முக்கிய செய்திகள்:
கொழும்பு நகரில் மீண்டும் மீனவர்கள் பேச்சுவார்த்தை:முதல்வர் ஜெயலலிதா அனுமதி

தமிழக இலங்கை மீனவர்களிடையே இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பு நகரில் மார்ச் 13-ம் தேதி நடத்த முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.அதற்கு முன்பாக, இலங்கை சிறையில் உள்ள 121 தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் படும் போதெல்லாம் அவர்களை உடனடியாக மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். அவரது உத்தரவின் பேரில் தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை, கடந்த ஜனவரி 27-ம் தேதி சென்னையில் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக முதல்வர் எடுத்த தொடர் முயற்சி மற்றும் வற்புறுத்தலின் காரணமாக இலங்கை சிறைகளில் இருந்த 295 தமிழக மீனவர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த 22 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

சென்னையில் நடந்த பேச்சு வார்த்தையில் தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவ பிரதிநிதிகளும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும், இலங்கை சார்பில் 10 மீனவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை இலங்கையில் நடத்தி, சுமுக முடிவு எடுப்பது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, அடுத்தகட்ட பேச்சு வார்த்தையை இலங்கையின் கொழும்பு நகரில் வரும் 13-ம் தேதி நடத்த முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அதற்கு முன்பாக முதல்கட்ட பேச்சுவார்த் தைக்குப் பிறகு இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 121 தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளருக்கு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளது. மேலும், முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் விவாதிப்பதற்கு எடுத்துக் கொண்ட பொருள்கள் அடிப்படையிலேயே கொழும்பு பேச்சுவார்த்தையையும் நடத்தலாம் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தமிழக அரசின் வருவாய்த்துறை தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்ட வழக்குக்கு எந்த குந்தகமும் ஏற்படாத வகையில் இருதரப்பு மீனவர் பேச்சுவார்த்தை நடக்கும் எனவும், பேச்சுவார்த்தையின்போது நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தமிழக அரசின் ஒப்புதலுக்குப் பின்னரே செயல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசால் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மீனவப் பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசின் சார்பில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலர், மீன்வளத்துறை இயக்குநர், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள், கொழும்பில் நடக்கும் பேச்சுவார்த்தையிலும் பார்வையாளர்களாக கலந்து கொள்வார்கள் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்