முக்கிய செய்திகள்:
கருணாநிதியிடம் ஆசிபெற்றார் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 61–வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடக்கூடாது. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.அதன்படி தி.மு.க.வினர் இன்று மாநிலம் முழுவதும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கியும், மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார். அப்போது கருணாநிதி மு.க.ஸ்டாலினை கட்டி அணைத்து உச்சி முகர்ந்து ஆசி கூறினார். தொடர்ந்து தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டினார். நிகழ்ச்சியில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதி, சகோதரி செல்வி, மு.க.தமிழரசு, இயக்குனர் அமிர்தம் உள்பட குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் போனில் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்து குவிந்து இருந்தனர்.

காலை 8 மணியளவில் விழா மேடைக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று அவருக்கு பழங்கள், சால்வைகள், பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

 

மேலும் செய்திகள்