முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை :நாஞ்சில் சம்பத் பேச்சு

மதுரை ஜவகர்புரத்தில் வடக்கு மண்டலத்தலைவர் ஜெயவேல் தலைமையில் நடந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கொள்கை விளக்க துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:,

ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தம் இல்லாமல் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி தமிழர்கள் 7 பேரை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய முதல்வர் அம்மா சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.

இது அவர் செய்த சாதனைகளிலேயே முதன்மையானது. உலக தமிழ் இனமே வியந்து பாராட்டுகிறது. ஆனாலும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு இன்னும் ரத்தவெறி அடங்கவில்லை. தமிழனுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதில்தான் மத்திய அரசு குறியாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் அந்த அரசு துடைத்து எறியப்படும்.

7 பேர் விடுதலை அறிவிப்பை பாரதீய ஜனதா தலைவர்களாக ரவிசங்கர் பிரசாத், அருண்ஜெட்லி போன்றோர் அரசியல் நடவடிக்கை என்று குறை கூறி வருகிறார்கள். இந்த கூட்டணியில் தான் வைகோ இருக்கிறார். அவருக்கு பாரதீய ஜனதா தலைவர்களின் கருத்து ஏற்புடையது தானா? ஏன் இன்னும் வைகோ மோடிக்கு காவடி தூக்குகிறார் என்பது தெரியவில்லை. தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை. அடுத்த பிரதமராக அம்மாவை அரியனையில் அமர வைக்க இலை அலை தான் வீசுகிறது.தமிழகத்தின் அ.தி.மு.க.வை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன.

தமிழ் இனத்தின் ஒரே தலைவராக முதல்வர் அம்மா திகழ்கிறார் எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல் களத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

மேலும் செய்திகள்