முக்கிய செய்திகள்:
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: ஜெயலலிதா

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:,

விவசாயிகளின் கடன் சுமையையும், வட்டிப் பளுவையும் குறைக்கும் வகையிலும், இடைத் தரகர்களின் பிடியிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றவும் ஏற்படுத்தப்பட்டவை கூட்டுறவு இயக்கங்கள். இதன் அடிப்படையில், தமிழ்நாடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், விவசாயிகளுக்குத் தேவையான குறுகிய காலப் பயிர்க் கடன், முதலீட்டுக் கடன், வேளாண்மைத் தொழிலுக்குத் தேவையான உரம், விதை போன்ற இடுபொருட்களை வழங்கி வருவதோடு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து, கடன் அமைப்பின் அடித்தளமாக விளங்கி வருகின்றன.இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பித்த பெருமை தமிழ்நாட்டையே சாரும். தற்போது 4,524 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. மேற்படி கூட்டுறவுச் சங்கங்கள் கடந்த 33 மாதங்களில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது.

31.3.2011 அன்று 1,245 கோடியே 51 லட்சம் ரூபாயாக இருந்த சொந்த மூலதனம், 31.3.2013ல் 1,782 கோடியே 16 லட்சம் ரூபாயாகவும், வைப்பீடுகள் 4,776 கோடியே 74 லட்சம் ரூபாயிலிருந்து 6,268 கோடியே 80 லட்சம் ரூபாயாகவும், கடன் உதவி 11,857 கோடியே 24 லட்சம் ரூபாயிலிருந்து 16,764 கோடியே 52 லட்சம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 4,524 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில், 671 சங்கங்கள் தொடர் லாபத்திலும், 3,442 சங்கங்கள் சில ஆண்டுகளில் லாபம் ஈட்டியும், மீதமுள்ள 411 சங்கங்கள் நட்டத்திலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மேற்படி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு அறிவித்த அகவிலைப் படியினை அவர்களுக்கும் வழங்கிட நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன்.

மேற்படி கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தங்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு, 31.3.2013 உடன் ஐந்தாண்டுகள் ஆகி விட்டதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க நான் ஆணையிட்டேன். இந்தக் குழு தற்போது தனது பரிந்துரையை அரசுக்கு அளித்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த நான், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கீழ்க்காணும் ஊதிய உயர் வினை வழங்குமாறு ஆணையிட்டுள்ளேன்.

இதன்படி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நிகர லாபத்தில் செயல்பட்டு வருவதோடு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து எந்த நிதியுதவியும் பெறாமல் சொந்த நிதியிலிருந்து செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 12 விழுக்காடு ஊதிய உயர்வு 1.4.2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நிகர லாபத்தில் இயங்கி, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கூட்டுறவு சங்க விதிகளின்படி உச்சபட்சமான 14 விழுக்காடு ஈவுத் தொகையை தொடர்ந்து வழங்கி வரும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கூடுதலாக ஓர் ஊதிய உயர்வு ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து நிதியுதவி பெற்று தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நிகர லாபத்தில் இயங்கி வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு ஊதிய உயர்வு 1.4.2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.சில ஆண்டுகள் லாபம் ஈட்டி, குவிந்த நட்டத்துடன் செயல்படும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 விழுக்காடு ஊதிய உயர்வு 1.4.2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.நடப்பு மற்றும் குவிந்த நட்டத்தில் செயல்படும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 5 விழுக்காடு ஊதிய உயர்வு 1.4.2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.

ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்குக் கீழ் கடன் நிலுவையிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு, இச்சங்கங்களின் கடன் நிலுவை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்த பின்னர் 5 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் அடிப்படையில் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த ஊதிய உயர்வு மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், குறைந்த பட்சம் 558 ரூபாயும், அதிக பட்சம் 5,661 ரூபாயும் ஊதிய உயர்வு பெறுவர். இதனால் 26 கோடியே 89 லட்சம் ரூபாய் அளவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ஆண்டு தோறும் கூடுதல் செலவினம் ஏற்படும்.

இதே போன்று, நகர்ப் புறங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு கடன் வழங்கும் பணியை நகர கூட்டுறவு வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போது, தமிழ்நாட்டில் 120 நகர கூட்டுறவு வங்கிகள் செயல் படுகின்றன. இவ்வங்கிகள் 9,278 கோடி ரூபாய்க்கு மேல் வாணிபம் செய்து வருகின்றன. இவ்வங்கிப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 27.11.2011 அன்றுடன் முடிவடைந்துள்ளது.

மேற்படி வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான ஒப்பந்தம் முடிவுற்றதால், ஊதிய விகிதத்தை திருத்தி அமைக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு நான் ஆணை யிட்டிருந்தேன். எனது உத்தர வினையடுத்து, நகரக் கூட்டுறவு வங்கிகளில் பணி புரியும் பணியாளர்களுக்கான ஊதிய விகித பரிந்துரையை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அரசுக்கு அனுப்பியுள்ளார்.இதன் அடிப்படையில், விரிவான கலந்தாய்வுக்குப் பிறகு, நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கீழ்க்காணும் ஊதிய உயர்வினை வழங்குமாறு நான் ஆணையிட்டுள்ளேன்.

இதன்படி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் லாபம் ஈட்டி, 100 கோடி ரூபாய்க்கு மேல் வாணிபம் செய்யும் 27 நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு ஊதிய உயர்வு 1.1.2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் லாபம் ஈட்டி, 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை வாணிபம் செய்யும் 37 நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 15 விழுக்காடு ஊதிய உயர்வு 1.1.2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளில் லாபம் ஈட்டி, 50 கோடி ரூபாய்க்கு கீழ் வாணிபம் செய்யும் 42 வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு ஊதிய உயர்வு 1.1.2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.சில ஆண்டுகள் லாபம் ஈட்டி, குவிந்த நட்டத்துடன் இயங்கும் 14 நகரக் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 5 விழுக்காடு ஊதிய உயர்வு 1.1.2012 முதல் நிலுவைத் தொகையின்றி வழங்கப்படும்.

நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு 1.1.2012 அன்று நுகர்வோர் குறியீட்டு புள்ளிகள் 4443 ஆக இருந்ததில், 2836 புள்ளிகள் சம்பளத்துடன் இணைக்கப்படும். 1.1.2012 அன்று 60.15 விழுக்காடு அகவிலைப்படி வழங்கப் படுவதுடன், ஒவ்வொரு காலாண்டில் 4 விலைப் புள்ளிகளுக்கு 0.15 விழுக்காடு அகவிலைப்படி என்ற அளவிலான உயர்வு அனைத்து நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.இந்த ஊதிய உயர்வினால் 120 நகரக் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் 1,701 பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 419 ரூபாயும், அதிகபட்சம் 9,344 ரூபாயும் கூடுதலாகக் கிடைக்கும். இதன் காரணமாக நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 13 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்.

அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களிலும், கூட்டுறவு நகர வங்கிகளிலும் பணியாளர்களுக்கான இந்த ஊதிய உயர்வு, உரிய சட்ட நடைமுறைகளின்படி வழங்கப்படும்.எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கூட்டுறவுப் பணியை மேற்கொள்ளும் பணியாளர்களின் வாழ்வு மேலும் சிறக்க வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்