முக்கிய செய்திகள்:
எண்ணூர் அனல்மின் நிலையத்திட்டம்: ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:,

மின்சாரப் பற்றாக்குறையை அறவே அகற்றி, மின் விநியோகத்தில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழவும், தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கவும், முதல்– அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.முதல்–அமைச்சர் ஜெயலலிதா 29.3.2012 அன்று சட்டமன்றப் பேரவையில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்த அனல் மின் திட்டம் சூப்பர் கிரிட்டிக்கல் என்னும் தொழில்நுட்பத்துடன் கூடியதாக இருக்கும் என்றும், இதன் மூலம், குறைந்த அளவு நிலக்கரியில் அதிக அளவு மின் உற்பத்தியைப் பெற இயலும் என்றும் அறிவித்திருந்தார்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் 4956 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டிலான 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க மிக உய்ய அனல் மின் திட்டப் பணிக்கு தமிழக அரசின் அனுமதி 30.03.2012 அன்று வழங்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியோடு பிற அனுமதிகளும் பெறப்பட்ட பின் இந்தத் திட்டத்தை நிறுவுவதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தப் புள்ளியில் ஹரியானா மாநிலம், குர்கானில் அமைந்துள்ள லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த அனல் மின் திட்டமானது, தமிழ்நாட்டில் நிறுவப்படும் முதல் மிக உய்ய அனல் மின் திட்டமாகும்.

திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் மாநிலத்தில் முதன்முறையாக 4956 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டிலான 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க மிக உய்ய அனல் மின் திட்டப் பணிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.மேலும், இந்த திட்டத்தின் மிக முக்கிய அம்சமாகிய அனல் மின் நிலையத்தை 3,961 கோடி ரூபாய் செலவில் நிறுவுவதற்கான பணி ஆணையினை லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் திரு எல். மதுசூதன் ராவ் அவர்களிடம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித் துறைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கு. ஞானதேசிகன், லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் எஸ்.சி. மனோச்சா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்