முக்கிய செய்திகள்:
கூட்டணிப்பற்றி அறிவிப்பை விஜயகாந்த் இன்று வெளியிடுகிறார்

பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியும் தங்களது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.பாரதிய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. ஏற்கனவே இணைந்து விட்டது. தே.மு.தி.க., பா.ம.க.விடம் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் தே.மு.தி.க.விடம் பல சுற்று பேச்சுவார்த்தை தொடங்கி, நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீசிடம் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது பாரதிய ஜனதா-தே.மு.தி.க. இடையே உடன்பாடு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு குறித்த தகவல்களை எல்.கே.சுதீஷ், சிங்கப்பூரில் உள்ள விஜயகாந்திற்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கூட்டணிக்கு முழு சம்மதம் என்ற தகவலை விஜயகாந்த், பாரதிய ஜனதா தலைவர்களிடம் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக தே.மு.தி.க. எந்த கூட்டணியில் சேரும் என்று குழப்பம், அரசியல் கட்சிகள் மத்தியிலும், அந்த கட்சிகளின் தொண்டர்களின் மத்தியிலும் எழுந்தது. பாரதிய ஜனதா-தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததை தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிங்கப்பூரில் இருந்து விஜயகாந்த் இன்று (வியாழக்கிழமை) வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

மேலும் செய்திகள்