முக்கிய செய்திகள்:
சட்டம்–ஒழுங்கை சரிசெய்யும் பணியில் காவல்துறையை ஈடுபடுத்த வேண்டும்:ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:, 

சென்னை கேளம்பாக்கம் பகுதியிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி என்ற பெண் பொறியாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அதே பகுதியில் சர்மிளா என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். பெண் பொறியாளர் உமா மகேஸ்வரியின் படுகொலை யும், இவ்வழக்கை காவல் துறையினர் கையாண்ட விதமும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

உமாமகேஸ்வரி காணாமல் போனதாக கடந்த 14-ஆம் தேதியே கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்குக் கூட காவல் துறையினர் முயற்சி மேற்கொள்ளவில்லை. உமா பணியாற்றி வந்த மென்பொருள் நிறுவனத்திற்கு அருகில் புதரில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த பிறகே காவல்துறையினர் சென்று அந்த உடலைக் கைப்பற்றியுள்ளனர்.காவல்துறையினர் எவ்வளவு மந்தமாக செயல்படுகின்றனர் என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் இருக்க முடியாது. காவல் துறையினரின் பொறுப்பற்ற தன்மையை நான் பல முறை சுட்டிக்காட்டியும் எந்த பயனுமில்லை. இதற்கு காரணமான கேளம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் சுப்பையா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுப்பையா காட்டிய அலட்சியம் ஒரு தனித்த நிகழ்வல்ல. இதற்கு ஒட்டு மொத்த காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். உமா மகேஸ்வரி படுகொலை குறித்த விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போதே அப்பகுதியில் இன்னொரு பெண் கொல்லப்பட்டிருப்பது வேதனையானது.மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய பெண்கள் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் ஏற்கனவே ஓரிரு முறை நடந்துள்ளன. அதிலிருந்து காவல்துறையினர் பாடம் கற்று, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தால், உமா மகேஸ்வரியின் கொலையை தவிர்த்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் கொலை நடந்தபின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஆலோசனை நடத்துவதும், ஓரிரு வாரங்களுக்குப் பிறகு இதை அப்படியே விட்டு வேறு பணியில் ஈடுபாடு காட்டுவதும் எந்த வகையிலும் பயனளிக்காது.

கொலைகளும், குற்றங்களும் கொடூரமானவை, அவை முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு செயல்பட வேண்டும். சட்டம்–ஒழுங்கை சரிசெய்யும் பணியில் காவல்துறையை ஈடுபடுத்த வேண்டும் இதன் மூலம் மக்கள் மனதில் நிலவும் அச்சத்தை தமிழக அரசு போக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

மேலும் செய்திகள்