முக்கிய செய்திகள்:
உமா மகேஸ்வரியின் கொலை குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு

கேளம்பாக்கத்தை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்த என்ஜினீயர் உமாமகேஸ்வரி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13–ந்தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிய அவர், பின்னர் மாயமானார். இதன் பிறகு நேற்று முன்தினம் காலையில் உமாமகேஸ்வரியை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது.

சிப்காட் வளாகத்திலேயே புதர் மண்டிக் கிடந்த பகுதியில் அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. கழுத்தை அறுத்து, வயிற்றில் கத்தியால் குத்தி உமாமகேஸ்வரியை கொன்ற கொலையாளிகள் போதையில் அவரை கற்பழித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா முதலில் விசாரணை நடத்தினார். இந்த விவகாரத்தில் அசட்டையாக நடந்து கொண்டதாக கூறி உயர் அதிகாரிகள் நேற்று அவரை சஸ்பெண்டு செய்தனர். உமா மகேஸ்வரியின் கொலை தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டிக்கு விசாரணை இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு உடனடியாக மாற்றப்பட்டது. ஐ.ஜி மகேஸ்குமார் அகர்வால் தலைமையிலான போலீசார் நேற்றே தங்களது விசாரணையை தொடங்கினார்.

இன்று 2–வது நாளாக சிறுசேரியிலேயே முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்த சிப்காட் வளாகத்தினுள் கடந்த 13–ந்தேதி அன்று சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்கள் யார்–யார்? என்கிற பட்டியலை சேகரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டு பிடிக்க திட்ட மிட்டுள்ளனர்.உமா மகேஸ்வரியின் தோழிகள் சிலரிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். உமாமகேஸ்வரியின் செல்போன் அவர் காணாமல் போன தினத்தில் இருந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதனை கொலையாளிகள் எங்காவது தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வழக்கை பொறுத்த வரை போலீசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. கொலையாளிகள் பற்றி எந்த விதமான தகவலும் கிடைக்காத நிலையில், இந்த வழக்கில் போலீசுக்கு ஒரே ஒரு துருப்பு சீட்டாக இருப்பது உமா மகேஸ்வரியின் மாயமான செல்போன் மட்டுமே.

அவரது செல்போன் நம்பரை வைத்து சி.பி.சி. ஐ.டி. அதிகாரிகள் துப்பு துலக்கி வருகிறார்கள். உமா மகேஸ்வரியின் செல்போனுக்கு கடந்த 13–ந்தேதி அன்று வந்த போன் அழைப்பு களை வைத்தும், அவர் யார் யாரிடம் பேசியுள்ளார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.உமாமகேஸ்வரின் இ–மெயிலில் யார்–யார் தொடர்பில் இருந்தார்கள். சமூக வலை தளங்கள் மூலமாக அவர் யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்கிற பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள். உமா மகேஸ்வரி பள்ளியில் படித்த போது, அவரை வாலிபர் ஒருவர் ஒரு தலையாக காதலித்துள்ளார். அவர் சமீபத்தில் உமா மகேஸ்வரியை பெண் கேட்டும் சென்றுள்ளார்.

எனவே இக்கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாமா? என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உமாமகேஸ்வரியின் தந்தை ஊரான சேலம், தாயின் ஊரான அருப்புக்கோட்டை ஆகிய இடங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இந்த வழக்கை பொறுத்த வரை கேளம்பாக்கம் போலீசார் மிகவும் மெத்தனமாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.உமா மகேஸ்வரி காணாமல் போன மறுநாளே அவரது தந்தை பாலசுப்பிரமணி கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் அந்த புகாரின் மீது சரியாக விசாரணை நடத்தாமல் இழுத்தடித்துள்ளனர். உமா மகேஸ்வரி காதல் வசப்பட்டு யாருடனாவது ஓடிப் போயிருக்கலாம் என்றும் போலீசார் கூறியிருக்கிறார்கள். பின்னர் 4 நாட்கள் கழித்து சிப்காட் வளாகத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் புகார் கூறியுள்ளனர். அப்போதும் போலீசார் விழித்துக் கொள்ளாமலேயே இருந்துள்ளனர். இதனால் 9 நாட்கள் கழித்தே உமா மகேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே உமா மகேஸ்வரியின் கொலை குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. ராமானுஜம் அறிவித்துள்ளார். இது பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 9841059989 என்ற செல்போன் எண்ணிலும், 044–22502500, 22502510 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்