முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்த நாள் விழா தலைமைக் கழகத்தில் நாளை ‘கேக்’ வெட்டி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக 66 கிலோ எடையிலான பிரம்மாண்ட கேக் கொண்டுவரப்பட்டு தலைமை கழக நிர்வாகிகளால் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்படுகிறது.இதில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களை விளக்கும் சிறப்பு மலர் புத்தகம் வெளியிடப்படுகிறது.

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.தலைமை கழக வளாகத்தில் பல்வேறு அணி சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தி இனிப்பு வழங்குகிறார்கள். இதேபோல் ஒவ்வொரு பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அன்னதானம் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

அம்பத்தூர், பாடி சிவன் கோவிலில் அம்பத்தூர் நகரக் கழகம் சார்பில் சிறப்பு பூஜையும் 6666 பேர்களுக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்படுகிறது.முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வயதைக் குறிக்கும் 66 கிலோ ‘கேக்‘ செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதேபோல் அம்பத்தூரில் உள்ள அனைத்து கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி, அமைச்சர் அப்துல் ரஹீம், மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், அம்பத்தூர் நகர கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

இதேபோல் திருவேற்காடு கோவிலில் மாவட்ட துணைச் செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஜி.செந்தமிழன், கோட்டூர்புரம் வரசக்தி விநாயகர் கோவில் உள்பட 16 கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்துகிறார். ரத்ததான முகாமும் நடத்துகிறார். நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார். இதில் அமைச்சர் வளர்மதி, மைத்ரேயன் எம்.பி. உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

 

மேலும் செய்திகள்