முக்கிய செய்திகள்:
பா.ம.க. தலித்களுக்கு எதிரி கிடையாது:அன்புமணி ராமதாஸ் பேச்சு

பா.ம.க. சார்பில் இளைஞர்கள் எழுச்சி மாநாடு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு கடலூர் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.மாநாட்டில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:,

பண்ருட்டி என்றால் பலாப்பழமும், முந்திரிக் கொட்டையும் தான் நினைவுக்கு வரும். பலாப்பழத்தின் வெளியில் முட்கள் இருக்கும் உள்ளே இனிப்பான சுளைகள் இருக்கும். டாக்டர் ராமதாஸ் பலாப்பழம் போன்றவர். சாதாரணமாக பழத்துக்குத்தான் கொட்டைகள் இருக்கும். ஆனால் முந்திரிக் கொட்டைகள் மட்டும் பழத்துக்கு வெளியே இருக்கும்.

பண்ருட்டியில் 2 முந்திரிக் கொட்டைகள் இருக்கிறது. அந்த 2 முந்திரிக் கொட்டைகளும் அ.தி.மு.க.விடம் சரண் அடைந்துவிட்டன. முதல்– அமைச்சராக இருப்பவர் மாவட்டம் தோறும் சென்று மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி நடக்கிறதா? 4 அதிகாரிகள்தான் தமிழகத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் வெறுக்கிறார்கள். இந்த கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க.வை மக்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் பா.ம.க. வித்தியாசமான கொள்கைகளை கொண்ட கட்சி. தமிழகத்தை ஆட்சி செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இலவசமாக தருவோம். திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு துரோகம் செய்த கட்சிகள்.

பா.ம.க. தலித்களுக்கு எதிரி கிடையாது. ஆனால் தலித் என்கிற போர்வையில் ஒரு கும்பல் பெண்களை கடத்தி கட்டப்பஞ்சாயத்து செய்கிறது. காதல் நாடகத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்த கடலூர் மாவட்டம் தான். இன்று எல்லா சமுதாயத்தினரும் நம்முடன் இருக்கிறார்கள். எல்லா சமுதாயத்துக்கும் டாக்டர் ராமதாஸ் தான் பாதுகாப்பு. எல்லா சமுதாயத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றால் அனைவரும் பா.ம.க.வின் பக்கம் வரவேண்டும்.

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதாக அறிவித்தது அரசியல் நாடகம். நளினி உடல்நலமில்லாத தன் தந்தையை பார்த்து வருவதற்காக பரோலில் செல்ல அனுமதி கேட்டபோது மறுத்தது தமிழக அரசு. ஆனால் அரசியல் காரணங்களுக்காக நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்வதாக ஆளும்கட்சி அறிவித்துள்ளது.

ராஜீவ் கொலையாளிகளை வைத்து தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அரசியல் செய்கின்றன. நாம் மட்டும் தான் இலங்கை பிரச்சினையில் அரசியல் செய்யவில்லை. எனவே இதையெல்லாம் மனதில் வைத்து நம் வெற்றி வேட்பாளர் கோவிந்தசாமியை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

மேலும் செய்திகள்