முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி மிகவும் பலம் வாய்ந்த கூட்டணி:திருமாவளவன் பேட்டி

கிருஷ்ணகிரியில் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா புதிய மாநிலம் உருவாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்துள்ளோம். காரணம், ஐதராபாத் நிஜாம் காலத்தில் தெலுங்கானா பகுதியை பாகிஸ்தானுடன் இணைக்க அவர் திட்டமிட்டார். ஆனால் நேரு மற்றும் பட்டேல் ஆகியோர் இந்திய துணை ராணுவத்தை அனுப்பி, நிபந்தனையுடன் இந்திய யூனியனுடன் தெலுங்கானாவை இணைத்தனர்.

நிபந்தனை என்னவென்றால், விரும்பும் வரை இணைந்து இருக்கலாம். விருப்பம் இல்லை என்றால் பிரிந்து செல்லலாம் என்பதுதான். அந்த நிபந்தனையின் வாக்குறுதிதான் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே அதை நாங்கள் வரவேற்றோம். தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மக்கள் பகைமை உணர்வுகளை மறந்து சகோதரத்துடன் வாழ வேண்டும்.

தமிழக அளவிலும், தேசிய அளவிலும் சில கட்சிகள் சாதி, மத வெறியை தேர்தல் பிரசார உத்தியாக கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் பா.ம.க. சாதி வெறியையும், தேசிய அளவில் முஸ்லிம் வெறுப்பை பா.ஜ.க.வும் கையில் எடுத்துள்ளனர். உழைக்கும் மக்கள், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் இந்த மதவாத சக்திகளை தேர்தலில் புறந்தள்ள வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வன்னியர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேட பா.ம.க. திட்டமிட்டுள்ளது. எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு தமிழக அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாகும். சாதி, மதவெறி கொண்ட, சமூக நீதிக்கு எதிரான சக்திகளை எதிர்க்கும் மேலும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கிறோம்.

தே.மு.தி.க. நிச்சயம் பா.ஜ.க. கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள் என நம்புகிறேன். ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியோடு கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழக அளவிலும், தேசிய அளவிலும் சாதி, மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் நாங்கள் முழுமனதோடு வரவேற்போம்.

இவ்வாறு கூறினார்.

 

மேலும் செய்திகள்