முக்கிய செய்திகள்:
இடதுசாரிகள் கொண்ட மாற்று அணி பாராளுமன்ற தேர்தலில் 500 தொகுதிகளில் போட்டியிடும்:தா.பாண்டியன் பேட்டி

திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற மார்ச் மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விவாதித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் எந்த வித நிலையும் இதுவரை எட்டப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறோம்.

இடதுசாரிகள் கொண்ட மாற்று அணி பாராளுமன்ற தேர்தலில் 500 தொகுதிகளில் போட்டியிடும். மத்தியில் மாற்று அணி ஆட்சி அமைக்கும். இந்த அணியின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. அதற்கேற்ப மக்கள் தீர்ப்பு அமையும். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

விஜயகாந்துடன் கூட்டணி அமைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். முன்கூட்டியே ஏமாறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கச்சத்தீவை கேட்பதற்கு இந்தியாவுக்கு உரிமையில்லை என்று கூறியிருப்பது இந்தியாவை விட இலங்கைக்காக வாதிடுவதாக இருக்கிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் உரிமை முக்கியம். கச்சத்தீவை மீட்காமல் தமிழர் பிரச்சினை தீராது.

ராஜீவ்காந்தி கொலை கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மனதார பாராட்டுகிறது. பேரறிவாளனின் தாயார் அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சி அடைகிறோம்.இவ்வாறு கூறினார்.

 

மேலும் செய்திகள்