முக்கிய செய்திகள்:
மத்திய பட்ஜெட்டில் ஒன்றுமில்லை: ஜெயலலிதா கருத்து

பாராளுமன்றத்தில் இன்று உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-

மக்களவை தொடர்ந்து முடக்கப்படுவது மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சமாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை கூற முயற்சி செய்துள்ளார்.

மேலும் இந்த ஆட்சியின் மிகப்பெரிய குறைபாடு மற்றும் திறமையின்மை பாராளுமன்றத்தில் தெரிந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதி மந்திரி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, அவருக்கு பாதுகாப்பாக உறுப்பினர்கள் சூழ்ந்து நின்றனர்.இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. நிதி மந்திரியின் உரையில், பெரும்பாலானவை ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களாகவே உள்ளன. இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு உலக பொருளாதார சூழ்நிலையை குற்றம்சாட்ட முயற்சிக்கிறார். ஆனால் ஆட்சியின் தோல்விகளில் இருந்து தப்பிக்க முடியாது.

பொதுத்தேர்தலை மனதில் கொண்டே பல்வேறு திட்டங்கள் மற்றும் வரி குறைப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சேவை வரி விதிக்கும் வேளாண் பொருட்கள் பட்டியலில் இருந்து அரிசிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

தமிழக மக்கள் மகிழ்ச்சியடைய இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. நிலைத்தன்மைக்கோ வளர்ச்சிக்கோ உதவாது. பொருளாதாரத்தை மீட்பதற்கும் உதவி செய்யாது. நல்லவேளை இது இடைக்கால பட்ஜெட். ஜூன் மாதம் பிரதான பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும். அதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யவும், நாடு உயர் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவும் தேவையான அம்சங்கள் இடம்பெறும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்