முக்கிய செய்திகள்:
தே.மு.தி.க. மீது ஓ.பன்னீர் செல்வம் தாக்கு

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வெங்கடேசன் பேசும் போது கூறியதாவது:–

இந்த அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்று வதில்லை. திருக்கோவிலூர் பஸ் நிலைய பிரச்சினை தொடர்பாக 10 முறை கோரிக்கை வைத்து விட்டேன். எதுவும் நடைபெறவில்லை.

எங்களது எல்லா கோரிக்கைகளும் கிடப்பில் போடப்படுகிறது. எதற்கும் நிதியும் ஒதுக்குவதில்லை. நாங்கள் கோரிக்கை வைத்தால் செய்வதில்லை.

அமைச்சர் நத்தம் விசுவநாதன்:– எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற நிதி தேவை. சமீபத்தில் டெல்லி சென்று நீங்கள் எல்லோரும் பிரதமரை சந்தித்தீர்கள். அப்போது பிரதமரிடம் தமிழகத்திற்கு நிதி கொடுங்கள் என்று ஏன் கேட்கவில்லை. அதை விட்டு விட்டு வேறு ஏதோபேசி இருக்கிறீர்கள். டெல்லியில் கூட்டணி பேசி தோல்வியடைந்து வந்திருக்கிறீர்கள்.

அமைச்சர் கே.பி.முனுசாமி:–

இவர்கள் நிதி கேட்டு இருந்தாலும் தமிழக அரசுக்காக கேட்டிருக்க மாட்டார்கள். வேறு எதற்கோ கேட்டு இருப்பார்கள். இங்கு இவர்கள் பேசுவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் உள்ளது.

மோகன்ராஜ் (தே.மு.தி.க. துணைத் தலைவர்):–

இன்று தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது தமிழ்நாடு முழுவதும் பேச்சாக உள்ளது.

அமைச்சர் வைத்திலிங்கம்:–

எங்க அம்மா (ஜெயலலிதா) கூட்டணி பற்றி கவலைபடுவதில்லை. அவர் கூட்டணி இல்லாமலேயே தேர்தலை சந்திக்கும் வல்லமை படைத்தவர். ஆனால் கூட்டணி விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறீர்கள் என்பது பத்திரிகைகளில் பார்த்தால் தெரிகிறது.

மோகன்ராஜ்:– பத்திரிக்கைகளில் உங்களைப் பற்றியும்தான் எழுதுகிறார்கள். பத்திரிகைகளில் வருவதை வைத்து கேவலம் என பேசக்கூடாது. பத்திரிகை செய்திகளை வைத்து பழி சுமத்தாதீர்கள்.

அமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்:– பிரதமரை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துள்ளனர். தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, மின்சார பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று இங்கு பேசுபவர்கள் அதற்கு தேவையான நிதியை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று பிரதமரிடம் சொன்னார்களா? இயற்கை இடர்பாடு ஏற்படும் நேரங்களில் புரட்சித் தலைவி அம்மா டெல்லியில் நிதி கேட்டும் அவர்கள் தருவதில்லை. தமிழகத்திற்கு தேவையான மானியங்களும் தருவதில்லை.

தே.மு.தி.க.வினர் டெல்லி போனார்கள். ஏதோ பேசினார்கள். கனமாக கிடைக்கும் என்று சென்றவர்கள் ஏமாந்து குழப்பத்தோடு திரும்பி வந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்