முக்கிய செய்திகள்:
ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு: ரத்ததானம் வழங்கி கின்னஸ் சாதனை

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக நேற்று மாபெரும் ரத்ததான முகாம் தமிழ்நாடு முழுவதும் 10 நகரங்களில் நடந்தது.

சென்னை குரோமபேட்டை, விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, கரூர், திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை ஆகிய 10 நகரங்களில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை மற்றும் பள்ளி கல்லூரி மைதானங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெற்றது.

சென்னையில் குரோமபேட்டை பஸ் கூண்டு கட்டும் பிரிவில் 60 ஆயிரம் சதுரடி பரப்பளவில் இதற்காக விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ரத்தம் கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார்.ரத்தம் கொடுக்க ஏராளமானவர்கள் திரண்டதால் அங்கு மாநாடு போல் கூட்டம் கூடியது. 20 ஆயிரத்து 494 பேர் ரத்தம் கொடுக்க ஆர்வமுடன் வந்திருந்தாலும், அவர்களில் ரத்தம் கொடுக்க தகுதியான 9360 பேர்களிடம் இருந்து மட்டுமே ரத்தம் பெறப்பட்டது.

இதேபோல் விழுப்புரம் காவலர் பயிற்சி மைதானத்தில் நடந்த முகாமில் 3800 பேர்கள் ரத்ததானம் செய்தனர்.

வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் 3774 பேர்களும், சேலம் கணேஷ் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் 1666 பேர்களும், கோவை அவிநாசி ரோடு ஜென்னீஷ் ரெசிடென்சி மைதானத்தில் 6305 பேர்களும் ரத்ததானம் வழங்கினார்கள்.

கரூர் திருவள்ளூவர் விளையாட்டு மைதானத்தில் 4102 பேர்களும், திருச்சி அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் 4098 பேர் களும் கும்பகோணத்தில் 3650 பேர்களும், மதுரை தமுக்கம் மைதானத்தில் 6010 பேர்களும், திருநெல்வேலி சதக்கத்துல்லா கல்லூரி மைதானத்தில் 5454 பேர்களும் ரத்ததானம் வழங்கினார்கள்.

மொத்தம் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஜெயலலிதா பிறந்த நாளுக்காக போக்குவரத்து துறை தொழிலாளர்கள் 53129 பேர் ரத்தம் வழங்கி சாதனை படைத்தனர்.ரத்ததானம் வழங்குமிடத்தில் மொத்தம் 160 ரத்த வங்கிகள் வந்திருந்து ரத்தம் சேகரித்தனர்.சென்னை குரோம்பேட்டை முகாமில் மட்டும் 40 ரத்த வங்கிகள் வந்திருந்து சேகரித்தனர்.

10 நகரங்களிலும் மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ‘ஷெட்’ போடப்பட்டு 2 ஆயிரத்து 500 படுக்கை வசதி அமைக்கப்பட்டு ரத்தம் சேகரிக்கும் பணி நடைபெற்றது.

ரத்ததான முகாமை பார்வையிட இங்கிலாந்தில் இருந்து உலக கின்னஸ் சாதனை கண்காணிப்பு குழுவினர் 5 பேர் வந்திருந்தனர்.இதில் லூசியா என்பவர் சென்னை– வேலூரில் நடந்த ரத்ததான முகாமை கண்காணித்தார். கோவை– தர்மபுரி முகாமை அண்ணா ஆக்போர்டு, சேலம்–விழுப்புரம் முகாமை பெஞ்சமின் பேக்ஹவுஸ், மதுரை– நெல்லையை பிரவீன்பட்டேல், திருச்சி, கும்பகோணம் முகாமை மார்க் மிக்கினி ஆகியோரும் கண்காணித்தனர்.

இதற்காக ஒவ்வொரு ரத்ததான முகாமும் வீடியோ எடுக்கப்பட்டதுடன், கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

ரத்ததான முகாம் தொடங்கிய நேரம், முகாம் முடிவடைந்த நேரம் முகாமுக்கு வந்த நபர்களின் எண்ணிக்கை பரிசோதனைக்கு பிறகு ரத்தம் வழங்கியவர்கள் எண்ணிக்கை என அனைத்தையும் சரி பார்த்து 53129 பேர் ரத்தம் வழங்கியதாக கின்னஸ் நிறுவனத்துக்கு ஆதாரங்களுடன் நேற்றிரவு தகவல் அனுப்பினர்.

இதற்கு முன்பு அரியானா மாநிலத்தில் 43,752 பேர் ரத்ததானம் செய்தது கின்னஸ் சாதனையாக இடம் பெற்று இருந்தது.

அதை முறியடிக்கும் வகையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ரத்ததான முகாம் அமைந்ததால் 53129 பேர் ரத்த தானம் செய்தது உலக கின்னஸ் சாதனையாக இடம் பெற்றுள்ளதாக இங்கிலாந்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கான சான்றிதழும் நேற்றிரவு இ–மெயில் மூலம் இங்குள்ள பிரதிநிதிகளுக்கு கிடைத்தது.

இதன்பிறகு நேற்றிரவு லூசியா சினிகாலீஸ் என்பவர் இந்த ரத்ததான முகாமை உலக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவித்தார்.முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு பயன்படும்படி உயிர் காக்கும் வகையில் ரத்ததான முகாம் நடத்திய அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், அதிகாரிகள், அமைச்சர் ஆகியோரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

 

மேலும் செய்திகள்