முக்கிய செய்திகள்:
பயிர் காப்பீட்டுக்கு ரூ.242 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:–

மலைப்பாங்கான நீலகிரி மாவட்டத்தின் சிறப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்காக, உதக மண்டலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய்க் கோட்டம் ஒன்று உருவாக்கப்படும்.

மொத்த வேளாண் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரித்து, மாநிலத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சியை உருவாக்கிட எடுக்கப்பட்ட முயற்சியால் நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற முக்கியப் பயிர்களின் உற்பத்தித் திறன் உயர்ந்து வருகிறது.

2014–2015 ஆம் ஆண்டில், திருந்திய நெல் சாகுபடி முறை, மேலும் மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். வரும் நிதியாண்டில், நவீன கரும்பு சாகுபடி முறை மேலும் 12,500 ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து கரும்பு விவசாயிகளிடையே இந்த சாகுபடி முறையையும், சொட்டு நீர்ப்பாசன முறையையும் பிரபலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அரசின் முயற்சிகளால், நாற்று நடவு துவரை சாகுபடியின் பரப்பளவு 97,813 ஏக்கராக உயர்ந்துள்ளது. இது வரும் நிதியாண்டில் 1.3 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும். இது போன்றே, 2013–2014 ஆம் ஆண்டில் 9,905 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட துல்லியப் பண்ணை சாகுபடி, 2014–2015 ஆம் ஆண்டில் மேலும் 11,000 ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். உற்பத்தித் திறனை உயர்த்தி விவசாயிகளுக்குக் கூடுதல் பயன் கிடைக்க இந்த முயற்சிகள் பெரிதும் உதவும்.

வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வேளாண் பணிகளுக்கான செலவினத்தைக் குறைக்கவும் ‘வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம்’ முனைப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014–2015 ஆம் ஆண்டில், இதனை மேலும் ஊக்குவிப்பதற்காக 100 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் நோக்கத்துடன் 22 மாவட்டங்களில் தேசியத் தோட்டக்கலை இயக்கத்தில், அதிக வருவாய் தரக்கூடிய தோட்டப் பயிர்களைப் பயிர் செய்தல் மற்றும் பயிர் பன்முனையாக்கல் ஆகியன ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட மற்ற திட்டங்களில் உள்ள நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி இந்த நோக்கம் எய்தப்பட்டு வருகின்றது.

வரும் நிதியாண்டில், 115 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசியத் தோட்டக்கலை இயக்கம் மேற்கூறிய 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் எஞ்சியுள்ள மாவட்டங்களில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தி, தோட்டப்பயிர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தையோ அல்லது பருவ நிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்தையோ செயல்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள ஒரு தலைபட்சமான முடிவால், விவசாயிகள் அதிக காப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகி, பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். விவசாயிகளின் இந்தக் கூடுதல் சுமையைக் குறைத்திடும் வகையில், கூடுதல் காப்பீட்டுத் தொகையை மத்திய அரசு, மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென இந்த அரசு வலியுறுத்தி வருகிறது. 2014–2015 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தில், பயிர் காப்பீட்டிற்காக 242.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாநிலத்தில் 3.34 லட்சம் ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 4 லட்சம் பருத்தி பேல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நமது மாநிலத்தில் உள்ள 1,948 நூற்பாலைகளுக்கு ஆண்டுதோறும் 110 லட்சம் பருத்தி பேல்கள் தேவைப்படுகின்றன. நமது மாநிலத்தில் பருத்தி உற்பத்தி போதிய அளவில் இல்லாத காரணத்தால், 50 கோடி ரூபாய் தொடக்க ஒதுக்கீட்டுடன் தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் என்ற ஒரு பெருந்திட்டம் தொடங்கப்படும்.

பருத்தி உற்பத்தித் திறனையும் மொத்த உற்பத்தியையும் உயர்த்துவதில் இந்த இயக்கம் கவனம் செலுத்தும். மத்திய அரசின் பருத்தி தொழில்நுட்ப இயக்கத்தில் உள்ள நிதியும் இந்த மாநில இயக்கத்துடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த இயக்கத்தின் மூலம், 2014–2015 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 3.70 லட்சம் ஏக்கர் பரப்பை பருத்திப் பயிர் சாகுபடியின் கீழ் கொண்டு வரவும், வரும் ஐந்து ஆண்டுகளில் இதை 6 லட்சம் ஏக்கராக உயர்த்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2013–2014 ஆம் ஆண்டின் கூட்டுறவு அமைப்புகள் மூலம் பயிர்க் கடன் வழங்குவதற்கான இலக்கு 4,500 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 3,948 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.

2014–2015 ஆம் ஆண்டில் கூட்டுறவு அமைப்புகளுக்கான பயிர் கடன் இலக்கு முன் எப்போதும் இருந்திராத அளவாக 5,000 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். பயிர்க் கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு, வட்டியில்லாக் கடன் வழங்குவதற்கான முழு வட்டிச் சலுகையை இந்த அரசு அளித்து வருகிறது. 2014–2015 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தில், இந்த வட்டிச் சலுகைக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்