முக்கிய செய்திகள்:
கல்வி உதவி தொகை திட்டத்துக்கு ரூ.236 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:–

நகர்புற பகுதிகளில் பணிபுரியும் பெண்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக 13 மாவட்டங்களில் 23.85 கோடி ரூபாய் செலவில் பணிபுரியும் பெண்கள் தங்கும் 20 விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில் தேவைப்படும் இடங்களில் 17.50 கோடி ரூபாய் செலவில் பணிபுரியும் பெண்கள் தங்கும் 14 விடுதிகள் புதிதாக அமைக்கப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்கு தேவையான போதிய நிதி ஒதுக்கீட்டை இந்த அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. மாநிலத்தின் ஆண்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக 7,603 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த திட்ட ஒதுக்கீட்டில் 18.02 சதவீதமாகும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது.2014–2015–ம் ஆண்டு வரவு–செலவு திட்டத்தில் பள்ளிக் கல்வி உதவித் தொகைக்காக 55.92 கோடி ரூபாய் உயர்கல்வி உதவித் தொகைக்காக 676 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

1,300 ஆதிதிராவிடர் விடுதிகள் மற்றும் 42 பழங்குடியினர் விடுதிகள் மூலம் 1,00,021 மாணவ–மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். 27 விடுதிகளுக்கான கட்டிடங்களை அமைப்பதற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 27 விடுதிகளுக்கான கட்டிடங்கள் 2014–25–ம் ஆண்டில் அமைக்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி செயல்படுத்தும் இந்த அரசின் கொள்கை மூலம் 2013–2014–ம் ஆண்டில் 4,84,933 மாணவ–மாணவிகள் பல்வேறு உயல்கல்வி பிரிவுகளில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இப்பிரிவுகளை சேர்ந்த ஏழை மாணவ–மாணவிகள் கல்வியை தொடர்வதற்காக 2013–2014–ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்களுக்காக 202.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6.40 லட்சம் மாணவ–மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். 2014–2015–ம் ஆண்டிற்கு இத்தகைய கல்வி உதவித் தொகை திட்டங்களுக்காக 236.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014–2015–ம் ஆண்டில் 2.80 கோடி ரூபாய் செலவில் 10 கல்லூரி விடுதிகள் புதியதாக தொடங்கப்படும். தற்போது செயல்பட்டு வரும் 10 கல்லூரி விடுதிகளுக்கு 4.5 கோடி ரூபாய் செலவில் கூடுதல் தங்கும் வசதிகள் ஏற்படுத்தப்படும். இதுபோன்ற, தற்போது செயல்பட்டு வரும் 10 கல்லூரி விடுதிகளுக்கு 2014–2015–ம் ஆண்டில் 16 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

 

மேலும் செய்திகள்