முக்கிய செய்திகள்:
தமிழக காவல் துறைக்கு ரூ.5,186 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:,

காவல்துறைக்கான ஒதுக்கீடு 2010–2011 ஆம் ஆண்டில் 3,184.47 கோடி ரூபாயாக இருந்ததை 2014–2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 5,186.20 கோடி ரூபாய் அளவுக்குக் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர், அரியலூர், சிவகங்கை மாவட்டங்களிலும், கோயம்புத்தூர் மாநகர காவல் பகுதியிலும் தொடங்கப்பட்ட, குற்றங்களையும் குற்றவாளிகளையும் கண்காணிக்கும் இணைப்புத் திட்டம் 26.09.2013 முதல் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, உரிமம் கோரும் மனுக்கள், புகார் மனுக்கள் போன்றவற்றை இணையதளம் மூலம் பதவி செய்யும் வசதி வாய்ப்புகள் ஏற்படும். இதன் மூலம் பொது மக்கள்–காவலர்கள் இடையே உள்ள தொடர்பில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் உயர வாய்ப்பு ஏற்படும்.

2013–2014 ஆம் ஆண்டில், 44.36 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய காவல் நிலையக் கட்டிடங்கள் கட்டுவதற்கும், 160.99 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்புக் கட்டிடங்கள் கட்டுவதற்கும், 142.62 கோடி ரூபாய் மதிப்பிலான பிற அலுவலகக் கட்டிடங்கள் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2014–2015 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காவல் நிலையக் கட்டிடங்கள், குடியிருப்புக் கட்டிடங்களுடன் பிற அலுவலகக் கட்டிடங்கள் கட்ட 571.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

காவல் துறையை நவீனமாக்கும் திட்டத்தில் 2011–2012 ஆம் ஆண்டு முதல் 2013–2014 ஆம் ஆண்டு வரை 196.14 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2014–2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கென 130.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாகத் தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைத் திட்டம், முதல்– அமைச்சர் சிந்தனையில் உதித்த உன்னதத் திட்டமாகும். ஏற்னெனவே உறுதியளித்தவாறு, இத்திட்டத்திற்கென 10,099 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை ஆறு புதிய காவல் நிலையங்களும், 44 புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்களும், இரண்டு புதிய காவல் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளதுடன், 117 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இது தவிர 15 மாவட்டங்களுக்கு 32 புதிய ஆயுதப்பிரிவுகளும், ஓர் ஆயுதப் படைக் கம்பெனியும் உருவாக்கப்பட்டு, இவற்றிற்கென 2,109 கூடுதல் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு காவலர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது.

தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு 2013–2014 ஆம் ஆண்டில், 101 மீட்டர் வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட இரண்டு ஊர்திகள், 10 நவீன ரக நீர் தாங்கி வண்டிகள், 52 உயர் அழுத்த பம்புகள், 38 ஒருங்கிணைந்த கருவிகள் மற்றும் நான்கு சிறப்பு ஊர்திகள் ஆகியவற்றிற்காக 50.50 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2014–2015 ஆம் ஆண்டிற்கான வரவு– செலவுத் திட்ட மதிப்பீட்டில் 189.65 கோடி ரூபாய் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசின் ஒரு புதிய முயற்சியாக, சிறைவாசிகள் தயாரித்த பொருட்களைக் காட்சிப்படுத்த புழல் மத்திய சிறை வளாகத்தில் ஒரு சிறை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. புழலில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் ஓர் அடுமனை தொழிற்கூடமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற முயற்சிகளை மேலும் ஊக்கப்படுத்த, 2014–2015 ஆம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறை வளாகங்களில் ஏற்கனவே அமைந்திருக்கும் தொழிற்கூடங்களை மேம்படுத்தவும், உகந்த தொழில் பிரிவுகளில் புதிய தொழிற் கூடங்களைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 2014–2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 194.66 கோடி ரூபாய் சிறைச்சாலைகள் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

2013–2014 ஆம் ஆண்டில், புதிய நீதிமன்றக் கட்டிடங்களையும், குடியிருப்புகளையும் அமைக்கவும், வாகனங்கள், இதர உபகரணங்கள் போன்ற வசதிகளை அளித்திடவும் 70.67 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, புதிய நீதிமன்றங்களை உருவாக்குவதற்கு 28.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பதிமூன்றாவது நிதிக்குழுவின் மானிய நிதியின் மூலமாக, 2013–2014 மற்றும் 2014–2015 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நீதித்துறை அமைப்புகளை மேம்படுத்திட 57.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அத்தகைய கரும்புள்ளிப் பகுதியில் உரிய கட்டுமானம் தொடர்பான திருத்தப்பணிகளை மேற்கொள்ள சிறப்பு திட்டம் ஒன்று 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படும்.இத்திட்டத்திற்காக 150 கோடி ரூபாய், 2014–2015 ஆம் ஆண்டில் ஒதுக்கப்படும். ஒரு நிதியாண்டில், அதிகபட்ச நிதியாக சாலைப் பாதுகாப்புக்கென 215 கோடி ரூபாயை ஒரு மாநில அரசு ஒதுக்கியிருப்பது இந்தியாவிலேயே இதுவே முதல் முறையாகும்.

சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ்கள் வழங்குவது உள்ளிட்ட அரசுச் சேவைகளை, பொதுச் சேவை மையங்கள் மூலமாக வழங்குவதற்கான மின் ஆளுமை மாவட்டத் திட்டம், 66.85 கோடி மதிப்பீட்டில், 2013–2014 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் 2,100–க்கும் மேலான பொதுச்சேவை மையங்கள் தனியார்– பொது பங்களிப்பு முறையிலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலமாக தற்போது இயங்கி வருகின்றன.

கூடுதலாக 2,000 பொதுச்சேவை மையங்கள் தனியார்– பொது பங்களிப்பு முறையில், 2014–2015 ஆம் ஆண்டில் தொடங்கப்படும். அனைத்துக் கிராமங்களிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது கிராம ஊராட்சிகள் மூலமாகவோ பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்