முக்கிய செய்திகள்:
வங்கிகள் ஸ்டிரைக்: பணம் இல்லாததால் ஏ.டி.எம். மூடப்பட்டன

வங்கி ஊழியர்கள் இன்று 2–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு, தனியார் மயமாக்கும் முடிவை கைவிடுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ‘ஸ்டிரைக்’ நடந்து வருகிறது.

வங்கி ஊழியர்கள் போராட்டத்தினால் பணம் பரிவர்த்தனை முடங்கியுள்ளது. வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டன. வங்கி கிளைகள் மூடப்பட்டன. காசோலை பரிமாற்றம், அந்நிய செலாவணி பரிமாற்றம் நடைபெறாததால் வர்த்தக, தொழில் நிறுவனங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின.பொதுமக்கள் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய முடியாலும், பணம் எடுக்க முடியாமலும், கடும் பாதிப்படைந்தனர். ஏ.டி.எம். மையங்களில் மூலம் அவசர தேவைக்கு பணம் எடுத்து நேற்று சமாளித்தனர். சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பதால் நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது.

பொதுத்துறை வங்கி கிளைகள் இன்றும் செயல்படாததால் வாடிக்கையாளர்கள், தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்படைந்தனர். சிறு பெருந்தொழில், கம்பெனிகள் பணப்பரிமாற்றம் செய்ய முடியாமல் தொழில்கள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. வங்கிகளில் காசோலைகள் தேங்கி கிடக்கின்றன.தமிழகத்தில் வங்கி ஊழியர்களின் 2 நாள் போராட்டத்தில் ஒரு கோடியே 50 லட்சம் காசோலைகள் தேக்கமடைந்தன. ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலை பரிவர்த்தனை முற்றிலும் முடங்கி உள்ளது.

இதே போல தமிழகம் முழுவதும் உள்ள 7500 ஏ.டி.எம். மையங்களில் பெரும்பாலானவை பணம் இல்லாமல் மூடப்பட்டன. ஒரு சில வங்கி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் செயல்படுகின்றன. இதனால் அங்கு நீண்ட வரிசையில் பணம் எடுக்க காத்து நின்றனர். புதிய தனியார் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டதால் அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. டி.டி. எடுப்பதற்கு நீண்ட வரிசை காணப்பட்டது.ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாசாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி அருகில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

 

மேலும் செய்திகள்