முக்கிய செய்திகள்:
சிறப்பு காவல் படை இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்கினார்

தமிழகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 10500 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா 23.4.2013 அன்று சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்குத் தேர்வு செய்ய, நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு மாவட்ட மற்றும் மாநகர காவல் துறை அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

அதன் அடிப்படையில் 1,49,488 இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் தகுதியுடைய 1,23,846 இளைஞர்கள் எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்டனர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 46,865 பேர் 37 மையங்களில் நடைபெற்ற உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில் இறுதியாக 10,099 பேர் தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி 12.2.2014 அன்று துவங்கப்படும்.

இந்நிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு மாநிலம் முழுவதிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 10,099 பேர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதின் அடையாளமாக 25 பேர்களுக்கு இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

 

மேலும் செய்திகள்