முக்கிய செய்திகள்:
பா.ம.க.வின் மாதிரி பட்ஜெட்:டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்

பா.ம.க.வின் மாதிரி பட்ஜெட்டை இன்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:–

நாங்கள் பா.ம.க. சார்பில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்தவற்கு முன்பு, மக்கள் மன்றத்தில் மாதிரி பட்ஜெட்டை வெளியிட்டு வருகிறோம். இந்த நடைமுறை மேற்கத்திய நாடுகளில் உள்ளன. நாங்கள் இன்று வெளியிட்டுள்ள 12–வது பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வருமாறு:,

அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி. கட்டண மில்லா கல்வி. தரமான கல்வி வழங்குவது. மத்திய அரசு பாடத்திட்டங்களுக்கு இணையான பாட திட்டங்களை அறிமுகப்படுத்துவது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை மாற்றி அமைப்பது. முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை ரத்து செய்வது. தற்காலிக, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது. பள்ளி கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடுகளை 30 ஆயிரம் கோடியாக உயர்த்துவது.

அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி அனைத்துவிதமான சிகிச்சைகளையும் தரமாகவும், இலவசமாகவும் வழங்குவது. டாக்டர்கள் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிப்பது. இந்த துறைக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது.

விவசாயிகளுக்கு தரமான விதைகள், மரம், பூச்சிக்கொல்லி மருந்து இலவசமாக வழங்குவது. விவசாயத்துக்காக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு டிராக்டர் இலவசமாக வழங்குவது. இந்த துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது. எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 40 விதமும். பசும்பால் லிட்டருக்கு ரூ. 30 விதமும் கொள்முதல் உயர்வது.

பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவது. ஊழலை ஒழிக்க லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதை தடுக்கவும், நாடக காதலால் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனிகாவல் பிரிவை ஏற்படுத்துவது.

புதிய தொழிற்சாலைகளுக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது. மதுரை, கோவை, திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமுல்படுத்துவது.கிடப்பில் போடப்பட்டுள்ள 12 ஆயிரம் மொகவாட் மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது. உள்ளாட்சி, அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது.

பிளஸ்–2 வரை தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது, எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்துவது, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து ஓய்வூதிய பலன்களும் கிடைக்க வகை செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்