முக்கிய செய்திகள்:
மோடியின் வருகையொட்டி பாதுகாப்பு வளையத்தில் வண்டலூர் வி.ஜி.பி. திடல்

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வண்டலூர் வி.ஜி.பி. திடலில் இன்று மாலை நடைபெறும் பொது கூட்டத்தில் பேச இருப்பதால் வண்டலூர் முழுவதும் பாதுகாப்பு வலையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொது கூட்டம் நடைபெறும் மேடையின் அருகிலும், பின்புறமும் யாரும் நெருங்க முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேடையின் பின்புறம் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள், மருத்துவ குழுவினர் வாகனம் தயார் நிலையில் உள்ளன.

மேடையில் பிரமாண்ட நவீன கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இது 500 மீட்டர் சுற்றளவுக்கு துல்லியமாக கண்காணிப்பு வசதி கொண்டது. மைதானத்திலும் முக்கிய பகுதிகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மைதானத்துக்குள் நுழைவதற்கு 15 ‘மெட்டல் டிடெக்டர்’ பொருத்தப்பட்ட பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி தவிர, சுற்றுப்புறத்திலும் 100 ஏக்கருக்கு மேல் காலி இடம் உள்ளது.மைதானம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. உணவு விடுதிகள், டீ ஸ்டால் ஆகியவையும் உள்ளன.நேற்று இரவில் இருந்தே பொதுக்கூட்ட மேடையும், மைதானமும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விட்டது. பொதுக் கூட்ட மேடை அருகிலும், மைதானத்தை சுற்றியும் ஆயிரக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மைதானத்துக்குள் வருபவர்கள், ‘மெட்டல் டிடெடர்‘ பாதை வழியாக போலீசாரின் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னை விமான நிலையம் முதல் சிங்கபெருமாள் கோவில் வரை போலீசார் தீவிர கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். நவீன கருவிகளுடன் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

மைதானத்துக்கு எதிரே 2 பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவையும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் 167 குடும்பத்தினரின் பெயர் விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

வெளி நபர்கள் இந்த குடியிருப்புக்குள் செல்ல வேண்டும் என்றால், போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பிறகு அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி வண்டலூர் பகுதி முழுவதுமே இன்று போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

 

மேலும் செய்திகள்