முக்கிய செய்திகள்:
தி.மு.க. மாநாட்டை கருணாநிதி தொடங்கி வைக்கிறார்

திருச்சி பிராட்டியூர் அண்ணா நகரில் வருகிற 15, 16–ந்தேதிகளில் தி.மு.க.வின் 10–வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்காக 200 ஏக்கர் பரப்பளவில் மைதானம் சமன்செய்யப்பட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செங்கோட்டை வடிவில் முகப்பும், பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்றம் வடிவில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

மாநாடு தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ளன. ஆனால் திருச்சியில் தற்போதே மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து சுற்றுப்பகுதியில் சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பிராட்டியூர் வரையிலும் சாலையின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இரவில் மாநாட்டு திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் பகல் போன்று காட்சி அளிக்கிறது.

இது வரை நடந்த 9 தி.மு.க. மாநாடுகளின் சிறப்புகளை மிஞ்சும் வகையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சுமார் 10 லட்சம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்கு மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. பாராளுமன்றம் போல அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு கரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் வாசுகி முருகேசன் பெயரிடப்பட்டு இருக்கிறது.மாநாட்டு அரங்கிற்கு பொற் செல்வி இளமுருகு பெயரும், முன்முகப்புக்கு எம்.எஸ். வெங்கடாசலம் பெயரும், வெளி முன்முகப்புக்கு தா.கிருஷ்ணன் பெயரும், உள்முகப்புக்கு மா.பாலகிருஷ்ணன் பெயரும், நுழைவு வாயிலுக்கு பூண்டி கலைச் செல்வன் பெயரும், கொடி மேடைக்கு கே.என்.ராம ஜெயம் பெயரும் சூட்டப்பட்டு உள்ளது.

வருகிற 15–ந்தேதி காலை 9 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, ராமஜெயம் நினைவு கொடிமேடையில் அமைந்துள்ள 90 அடி உயர கொடிகம்பத்தில் தி.மு.க. கொடியினை ஏற்றி மாநாட்டை தொடங்கிவைக்கிறார். இந்த கொடிகம்பம் நேற்று முன் தினம் நிறுவப்பட்டது.மாநாட்டை தொடங்கி வைக்க வருகை தரும் போது கருணாநிதியை வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, தொப்பி, வெள்ளை கையுறை, ஷூ அணிந்த 1,000 இளைஞர் அணியினரும், கட்சி கொடியை நினைவுகூறும் வகையில் கறுப்பு, சிவப்பு சுடிதார் அணிந்த 1,000 மகளிர் அணியினரும் சிறப்பு அணிவகுப்பு நடத்தி கருணா நிதியை வரவேற்க உள்ளனர். இதற்கான விசேஷ பயிற்சியில் மகளிர் அணியினர் மற்றும் இளைஞர் அணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மின்னொளியில் ஜொலிக்கும் மாநாட்டு திடலை மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து பார்த்து பிரமிப்பதோடு, வளாகம் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து செல்கிறார்கள்.மாநாட்டு வரவேற்பு குழு தலைவரான கே.என். நேரு இரவு, பகல் பாராமல் மாநாட்டு திடலிலேயே முகாமிட்டு பணிகளை கவனித்து வருகிறார்.

 

மேலும் செய்திகள்