முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க.வில் 4 பேர் குழு: ஜெயலலிதா அறிவிப்பு

பாராளுமன்றத்துக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளின் தலைவர்கள் சமீபத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள்.

அப்போது தங்களுக்கு தலா 3 தொகுதிகள் வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் இடதுசாரிகளுக்கு தலா 2 இடங்களை அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்து கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவதற்கு அ.தி.மு.க. சார்பில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:,

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் பொதுத்தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகத்தின் சார்பில் கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

1. ஓ.பன்னீர்செல்வம் (கழகப் பொருளாளர், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்)

2. நத்தம் இரா.விசுவநாதன் (திண்டுக்கல் மாவட்ட செயலாளர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்)

3. கே.பி.முனுசாமி (கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர்)

4. ஆர்.வைத்திலிங்கம் (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்)

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்